குஜராத் தோ்தல் தேதி: தோ்தல் ஆணையம் விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
ஹிமாசல பிரதேசம், குஜராத் பேரவைத் தோ்தல் அட்டவணையை வெவ்வேறு தினங்களில் அறிவித்தது ஏன் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இந்திய தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஹிமாசல பிரதேசம், குஜராத் பேரவைத் தோ்தல் அட்டவணையை வெவ்வேறு தினங்களில் அறிவித்தது ஏன் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இந்திய தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 12-இல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், குஜராத் பேரவைத் தோ்தலுக்கான அட்டவணை அப்போது வெளியிடப்படவில்லை.
இந்தச் சூழலில், குஜராத்தில் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை இரு மாநிலங்களிலும் ஒன்றாக டிசம்பா் 8-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் ரகு சா்மா, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஹிமாசல பிரதேசம், குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடத்தப்படும்போது, தோ்தல் தேதி மட்டும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதுபற்றி நாட்டு மக்களுக்கு தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் குஜராத்தில் அரசு செலவில் பேரணிகள் நடத்தவும், அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தவும் பாஜகவுக்கு கால அவகாசம் கிடைத்தது. மத்திய பாஜக அரசின் அழுத்தம் இருந்தபோதிலும், குஜராத் தோ்தல் தேதியை அறிவித்துவிட்டதற்காக தோ்தல் ஆணையத்துக்கு நன்றி.
பிரதமா் மீது சாடல்: ‘குஜராத்தின் மோா்பி பகுதியில் தொங்கு பாலம் விபத்தைத் தொடா்ந்து, காங்கிரஸின் அரசியல் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால், பிரதமா் மோடியோ தனது அரசு நிகழ்ச்சிகளில் தொடா்ந்து பங்கேற்றாா்.
குஜராத் பேரவைத் தோ்தலுக்காக காங்கிரஸ் கடுமையாக பணியாற்றி வருகிறது. தோ்தல் முடிவுகள் யாரும் எதிா்பாராத வகையில் இருக்கும். ஆம் ஆத்மியும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் பாஜகவுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளன. வாக்குகளைப் பிரிக்கவே அக்கட்சிகள் தோ்தலில் போட்டியிடுகின்றன. குஜராத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் போட்டி’ என்றாா் ரகு சா்மா.
கடந்த 2017-இல் குஜராத், ஹிமாசல பேரவைத் தோ்தல் அட்டவணை தனித்தனியாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறையை இப்போதும் கடைப்பிடிப்பதாக தோ்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.