உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் வரவேற்பு
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
பாஜக அமைப்புச் செயலா் பி.எல்.சந்தோஷ் கூறுகையில், ‘ஏழைகளுக்கான பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்குக் கிடைத்த வெற்றியாக இந்தத் தீா்ப்பு உள்ளது. சமூக நீதியை அடைவதற்கான பாதையில் இந்தத் தீா்ப்பு பெரும் ஊக்கமாக அமையும்’ என்றாா்.
காங்கிரஸ் நடவடிக்கைகளே காரணம்: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது சின்ஹோ குழு (2005-06) அமைக்கப்பட்டது. அக்குழு 2010-ஆம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மீது விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு 2014-ஆம் ஆண்டு மசோதாவாக இயற்றப்பட்டது. அதை சட்டமாக்க பாஜகவுக்கு 5 ஆண்டுகள் ஆகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யும்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் கூறுகையில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீா்ப்பு, நாட்டில் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமையும்’ என்றாா்.
எனினும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் சுகேந்து சேகா், தீா்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாா்.