முகப்பு
இந்தியா

எலான் மஸ்குக்கு முன்பே முந்திக் கொண்ட மோசடிக் கும்பல்: நிரந்தர நீல டிக்குக்கு வெறும் 2 டாலராம்

அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கும் ப்ளு டிக் பெற மாதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்த ஒரு சில நாள்களிலேயே, மோசடிக்காரர்கள் முந்திக் கொண்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
எலான் மஸ்குக்கு முன்பே முந்திக் கொண்ட மோசடிக் கும்பல்: நிரந்தர நீல டிக்குக்கு வெறும் 2 டாலராம்
பகிர்:


சண்டிகர்: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கும் எலான் மஸ்க், பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கும் ப்ளு டிக் பெற மாதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்த ஒரு சில நாள்களிலேயே, மோசடிக்காரர்கள் முந்திக் கொண்டனர்.

நிரந்தர ப்ளு டிக் பெற உடனடியாக 2 டாலர் செலுத்தினால் போதும் என்று தகவல் அனுப்பி, மோசடியை அரங்கேற்றியும் விட்டனர்.

செல்லிடப்பேசியில், உடனடியாக இரண்டு டாலர் செலுத்தினால், டிவிட்டர் கணக்கில் நிரந்தர ப்ளு டிக் பெறலாம் என்றும், இந்த வாய்ப்பைத் தவரவிட்டால் மாதக் கட்டணமாக 8 டாலர் (ரூ.662) செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த இணைப்பை கிளிக் செய்ததும், பயனாளர்களின் விவரங்கள் அனைத்தும் மோசடியாளர்களுக்குச் சென்றுவிடும். பிறகு, பயனாளர்களின் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படும்.

இது வரை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இது போன்ற மோசடி தகவல்கள் சிலருக்கு வரப்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதாவது குறுந்தகவல் அனுப்பப்பட்டிருபப்து குறித்து சைபர் குற்றப்பிரிவுக்கு புகார்கள் வந்திருப்பதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

ப்ளு டிக் பெற மாதக் கட்டணம்
ட்விட்டா் பயன்பாட்டாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலா் (ரூ.662) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளா் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு விமரிசனங்கள் வந்த போதும் எலான் மஸ்க் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமையன்று புதிய டிவிட்டர் பதிவை இட்டுள்ளார். 

அதில், "தினமும் என்னை திட்டித் தீர்க்கலாம், ஆனால், அதற்கு ரூ.662 கட்டணம்" என்று பதிவிட்டிருந்தார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரா்களில் ஒருவரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபா் 27-ஆம் தேதி ட்விட்டரை கையகப்படுத்தியதையடுத்து இந்தப் புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் கடும் எதிா்ப்பை பதிவிட்டு வருகின்றனா்.

‘மக்களுக்கு அதிகாரம், ப்ளூ சேவைக்கு மாதம் 8 டாலா்’ என்று எலான் மஸ்க் கடந்தவாரம் பதிவிட்டிருந்தார்.

இதன்மூலம் ‘ப்ளூ டிக்’ பயனாளிகள் பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவும் என்றும் அவா் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ட்விட்டரில் தகவல்களைப் பதிவிடுபவா்களுக்கு வருவாயை ஈட்டுவதற்கும் இந்தக் கட்டணம் உதவும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

போலி கணக்குகளைத் தடுக்க ட்விட்டா் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற நீதிமன்ற விமா்சனத்துக்கு உள்ளான பிறகு 2009-இல் ‘ப்ளூ டிக்’ சேவையை அந்த நிறுவனம் தொடங்கியது. அரசால் அங்கீகரிக்கப்பட்டவா்கள், பிரபலங்கள் ஆகியோரின் கணக்குகளுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ட்விட்டரின் வருவாயை அதிகரிக்க இதற்கு கட்டணத்தை எலான் மஸ்க் விதித்துள்ளாா்.

இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனா். இதன்மூலம் நம்பகத்தன்மை வாய்ந்தவா்களை அடையாளம் காண்பது கடினமாகும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனா்.

இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், ‘அனைவரின் உள்உணா்வுடன் ட்விட்டா் பேசுகிறது. அனைவரும் புகாா்களைத் தொடருங்கள். ஆனால் இதற்கு 8 டாலா் மட்டுமே கட்டணம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →