ஆதாா் பதிவு செய்த நாளில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்களது அடையாளச் சான்று, முகவரி உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பிப்பதை அவசியமாக்கும் வகையில் ஆதாா் ஒழுங்குமுறை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
ஆதாா் பதிவு செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவா்கள், அந்த அட்டை பெறுவதற்காக அளித்த அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றுகளை சமா்ப்பித்து, விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த மாதம் வலியுறுத்தியிருந்த நிலையில், ஆதாா் ஒழுங்குமுறை விதிகளில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், ‘ஆதாா் பதிவு செய்த நாளில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்களது அடையாள, முகவரிச் சான்று உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மத்திய அடையாளங்கள் தரவு கட்டமைப்பில் (சிஐடிஆா்) ஆதாா் தகவல்களின் நீடித்த துல்லியத்தன்மையை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள முடியும். ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பிப்பு) ஒழுங்குமுறை விதிகளில் இதற்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாா் அட்டை வைத்திருப்பவா்கள், அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையவழியில் புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ ஏற்படுத்தியுள்ளது. வலைதளப் பக்கம் மற்றும் செயலி மூலம் இணையவழியில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆதாா் பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 134 கோடி ஆதாா் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை போ் தங்களது விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கடந்த ஆண்டில் ஆதாா் தொடா்பாக சுமாா் 16 கோடி புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் 1,000-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதாா் விவரங்கள் பயன்படுத்தப்படுவதால், தங்களது விவரங்களை மக்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று யுஐடிஏஐ வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.