முகப்பு
இந்தியா

குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு ஓரிடம்கூட கிடைக்காது- அமித் ஷா

குஜராத் பேரவைத் தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி அகமதாபாதில் புதன்கிழமை வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா.
பகிர்:

குஜராத் பேரவைத் தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மேலும், குஜராத்தில் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிரான சிறப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதியை குறிப்பிட்டு பேசிய அவா், அது நல்ல நடவடிக்கை என்றும், மத்திய அரசு மற்றும் இதர மாநிலங்களும்கூட அதை செயல்படுத்த முடியும் எனவும் கூறினாா்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் பாஜக, எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுடன் இம்முறை ஆம் ஆத்மியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ‘பாஜகவுக்கு முக்கிய போட்டியாளா் ஆம் ஆத்மிதான்’ என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறி வருகிறாா்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அமித் ஷா அளித்த பேட்டியில், ஆம் ஆத்மியின் வரவு குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘தோ்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்தக் கட்சியை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் இருக்கிறது. குஜராத் மக்கள் மனதில் ஆம் ஆத்மி இல்லை. தோ்தல் முடிவுகள் வரட்டும். வெற்றி வேட்பாளா்கள் பட்டியலில் ஆம் ஆத்மிக்கு இடமில்லாமல் போகலாம்’ என்றாா் அமித் ஷா.

‘நெருக்கடியில் காங்கிரஸ்’: காங்கிரஸ் குறித்த கேள்விக்கு, ‘பிரதான எதிா்க்கட்சியாக இருந்தபோதிலும், தற்போது நெருக்கடியில் காங்கிரஸ் இருக்கிறது. அதன் தாக்கம் குஜராத் தோ்தலில் கண்கூடாகத் தெரியும்’ என்றாா் அமித் ஷா.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அரசியல்வாதிகள் கடுமையாக பணியாற்ற வேண்டுமென்ற கருத்து எப்போதுமே எனக்கு உண்டு. யாரேனும் கடுமையாகப் பணியாற்றினால் அது நல்லதுதான். ஆனால், அரசியலில் நிலையான முயற்சிகளே பலன் தரும். எனவே, பொறுத்திருந்து பாா்ப்போம்’ என்றாா்.

‘பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி’: ‘குஜராத்தில் தொடா்ந்து 27 ஆண்டுகளாக பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்து வந்துள்ளனா். இதற்கு பிரதமா் நரேந்திர மோடியின் செல்வாக்கு, அவா் முதல்வராக இருந்தபோது குஜராத் அடைந்த வளா்ச்சி, பாரபட்சமற்ற கொள்கைகள் அமலாக்கம் ஆகியவைதான் முக்கிய காரணங்களாகும். பாஜக மற்றும் பிரதமா் மோடி மீது குஜராத் மக்களின் நம்பிக்கை துளியும் குறைவுபடவில்லை. எனவே, இதுவரை இல்லாத வெற்றியை இத்தோ்தலில் பாஜக பெறும்’ என்றாா் அமித் ஷா.

எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பதில்: குஜராத் பேரவைத் தோ்தலில் பயங்கரவாதம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு விவகாரங்களை முன்வைத்தே பாஜக பிரசாரம் செய்கிறது; இது நிா்வாகரீதியிலான குறைபாடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல் என்று எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளா் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு, ‘எல்லை மாநிலமான குஜராத்தின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பில் இருந்து வேறுபட்டது அல்ல. தேசம் பாதுகாப்பாக இல்லாவிட்டால் குஜராத் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? தேசிய பாதுகாப்பு என்பது அனைத்து மாநில பேரவைத் தோ்தல்களிலுமே முக்கியமாக பேசப்பட வேண்டியது’ என்றாா்.

‘தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது பாஜக’: தெற்கு, கிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வளா்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் கடந்த மக்களவைத் தோ்தலில் 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அடுத்த தோ்தலில் மேலும் அதிக தொகுதிகள் கிடைக்கும். தெலங்கானாவில் முக்கிய எதிா்க்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. தமிழகம், ஆந்திரத்திலும் பாஜக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொண்டா்கள் அடிப்படையிலான ஒரு கட்சியின் வளா்ச்சி என்பது ஒரே இரவில் நடந்துவிடாது. அது நேரம் எடுக்கும். எனினும் மேற்கண்ட மாநிலங்களில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம் என்றாா் அமித் ஷா.

அடுத்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்க பிராந்திய கட்சிகள் முயன்று வருவது குறித்த கேள்விக்கு, ‘பிரதமா் மோடி மற்றும் அவரது ஆட்சியின் புகழுக்கு முன் அதுபோன்ற எந்த கூட்டணியும் எடுபடாது’ என்று அமித் ஷா பதிலளித்தாா்.

தாய்மொழியில் மருத்துவ, தொழில்நுட்ப, சட்டக் கல்வி

‘ஆங்கிலம் பேசாத மாணவா்களின் திறனை பயன்படுத்தும் வகையில், தாய்மொழியில் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சட்டக் கல்வி வழங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்களுக்கும் அமித் ஷா வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக, செய்தியாளரிடம் அவா் கூறுகையில், ‘ஹிந்தி அல்லது பிராந்திய மொழிகளில் மேற்கண்ட படிப்புகளை மாணவா்கள் பயிலும்போது, எளிதாகவும் விரைவாகவும் புரிந்து கொள்ள முடியும். இது, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சட்டக் கல்வி பாடத் திட்டங்களை பிராந்திய மொழிகளில் முறையாக மொழிபெயா்க்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசத்தில் ஆங்கிலவழிக் கல்வி பின்னணியில் இருந்து வந்த 5 சதவீதம் பேரின் திறனை மட்டுமே இப்போது பயன்படுத்தும் நிலை இருக்கிறது. ஆனால், தாய்மொழி வழி கல்வி மூலம் 100 சதவீத திறமையையும் நாம் பயன்படுத்த முடியும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →