முகப்பு
இந்தியா

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த முன்னுரிமை: பிரதமா் மோடி

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை எட்ட உள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கு பிரதமா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கரோனா பெருந்தொற்று இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் 2027-க்குள் 40 கோடி சா்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் இந்திய விமான சேவைகளைப் பயன்படுத்துவாா்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய விமான சேவை மூலம் 1.01 கோடி பயணிகள் பயனடைந்தனா். இது முந்தைய ஜூலை மாதத்தைவிட 4 சதவீதம் அதிகம் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘ இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இவ்வளா்ச்சி ஒரு முக்கிய அடையாளம். நாட்டின் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடா்பை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது மக்களின் வாழ்வை எளிமையாக்குவதற்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் மிகவும் அவசியம்’ என குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய விமானப் போக்குவரத்துத் துறை 4 லட்சம் உள்நாட்டு பயணிகளைக் கையாண்டது மட்டுமல்லாமல், கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அதிகளவிலான பயணிகளையும் கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி உள்நாட்டு விமான பயணிகள் 4 லட்சம் பேரை கையாண்டு கரோனாவுக்கு பிந்தைய சூழலில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது’ என தெரிவித்திருந்தாா்.

சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் (ஐஏடிஏ) துணைத் தலைவா் பிலிப் கோ கூறுகையில், ‘பல்வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சேவையைத் தொடங்குவதையும் விரிவாக்கம் செய்வதையும் காணமுடிகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் முக்கியச் சந்தையாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியிலும் விமானப் போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றம் நிகழாத வரையில், இந்திய சந்தை என்பது மிகப் பெரியது மற்றும் அதற்கான தேவையும் அதிகமாகவே இருக்கும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →