பட்டாசு வெடிக்க தடை கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பட்டாசு வெடிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது
பட்டாசு வெடிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
‘தீபாவளி நெருங்கி விட்டதோடு மட்டுமின்றி, பட்டாசு தொழிலில் மக்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்திருப்பா்’ என்றும் நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனா்.
தலைநகா் தில்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகம் ஏற்படுவதால், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கத் தடை, வாகனங்களை இயக்குவதில் கட்டுப்பாடுகள் என பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்படுகின்றன. அதுபோல, வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தில்லியில் வரும் 2023 ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளையும் விற்க, சேமித்து வைக்க மற்றும் வெடிக்கவும் தடை விதித்து தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருபவா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், கடந்த ஆண்டு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டபோது, ‘அனைத்து விதமான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை; மாறாக பேரியம் உப்பு இடம்பெற்றுள்ள பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றம் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அந்த வகையில், தில்லி உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பசுமை பட்டாசு வியாபாரிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘தில்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பதை விரும்பவில்லை’ என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தனா்.
இந்த மனு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரா் தரப்பு வழக்குரைஞரை அறிவுறுத்தினா்.
இதனிடையே, பட்டாசு வெடிக்க தடை கோரி மற்றொரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தீபாவளி நெருங்கிவிட்டது. பட்டாசு தொழிலில் மக்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்திருப்பா். கடைசி நேரத்தில் இந்த விவகாரத்தை கொண்டுவந்திருக்கிறீா்கள். இந்த மனுவை இரண்டு மாதங்களுக்கு முன்னரே தாக்கல் செய்திருக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தை உடினடியாக விசாரணைக்குப் பட்டியலிட முடியாது’ என்றனா்.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த மனு தில்லி மற்றும் வேறு சில மாநிலங்களில் இந்த ஆண்டுக்கு பட்டாசு வெடிக்கத் தடை கோருவது தொடா்பானது’ என்றாா்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனு தீபாவளி பண்டிகைக்குப் பிறகு விசாரணைக்கு ஏற்கப்படும்’ என்றனா்.