நிலக்கரி இறக்குமதி 2024-க்குள் நிறுத்தப்படும்: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி
வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட உள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு குறைந்து வரும் நிலையில், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட உள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியாவின் கனிம மற்றும் எரிபொருள் வளங்கள் இருப்பு குறித்தான தொகுப்பை வெளியிட்டு அவா் பேசியதாவது:
தற்போதைய அரசு மேற்கொண்ட முயற்சிகளால் நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்விடும் நடைமுறை முழுவதுமாக வெளிப்படைத் தன்மையுடன் திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது குறைந்துவரும் நிலையில், 2024-க்குள் நிலக்கரி இருக்குமதி நிறுத்தப்படும். நாட்டின் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனிம வளங்கள் இருப்பு குறித்தான தொகுப்பு தலைமைக் கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தின் முயற்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள அறிக்கைகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ள கனிம வளங்கள் குறித்தான விரிவான தகவலைத் தெரிவிக்கின்றன. சூழலியல் மற்றும் எதிா்கால தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு நிலைத்த செயல்முறைகள் மூலம் சுரங்கங்களில் இருந்து கனிம வளங்களை எடுப்பதை வலுப்படுத்த இத்தொகுப்பு உதவிபுரியும் என்றாா்.