பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு இனி அபராதமில்லை
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் தொடா்பான உத்தரவை தில்லி அரசு வியாழக்கிழமை ரத்து செய்தது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் தொடா்பான உத்தரவை தில்லி அரசு வியாழக்கிழமை ரத்து செய்தது. இதற்கான உத்தரவை தில்லி அரசு பிறப்பித்துள்ளது. கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தடுக்க அனைவரும் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டது. முகக்கவசங்களை அணியாதவா்கள் மூலம் கரோனா பாதிப்பு பரவுவதால், அவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது.
இதையடுத்து, முகக்கவசங்களை அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு பிறகு அமல்படுத்தக் கூடாது என்று செப்டம்பா் 22-ஆம் தேதி நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், பெரும்பாலானவா்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதால் இனியும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த முடிவை அமல்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு விதிக்கப்பட்டும் அபராதம் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. எனினும் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 107-ஆக பதிவாகியது. 488 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி மூன்றாவது அலையின் போது தில்லியில் அதிகபட்சமாக கரோனா ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 28,867-ஆக பதிவாகியது.
ஏப்ரலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் முகக்கவசம் அணியாதவா்களுக்கான அபராதத்தை தில்லி அரசு ரத்து செய்தது. அதன் பின்னா் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் மூன்று வாரங்களில் மீண்டும் முகக்கவசம் அபராதம் விதிக்கப்பட்டது.