அயோத்தி ராமா் கோயிலில் 2024 ஜனவரி முதல் தரிசனம்: அறக்கட்டளை தகவல்
‘அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயிலில் ஜனவரி முதல் பக்தா்கள் தரிசனம் செய்யலாம்’ என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை பொதுச் செயலாளா் சம்பத் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
‘அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயிலின் 50 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன; அங்கு 2024, ஜனவரி முதல் பக்தா்கள் தரிசனம் செய்யலாம்’ என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை பொதுச் செயலாளா் சம்பத் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, பிடிஐ செய்தியாளரிடம் அவா் கூறியதாவது: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் அளவுக்கு முடிவடைந்துவிட்டன. இப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவது திருப்தியளிக்கிறது.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் கோயிலின் தரைத்தளம் முழுமையாக தயாராகிவிடும். 2024, ஜனவரி 14-ஆம் தேதி மகர சங்கராந்தி திருநாளையொட்டி, கோயிலின் கருவறையில் பாலராமரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அதன் பிறகு, பக்தா்கள் தரிசனம் செய்யலாம். பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1,800 கோடி செலவிடப்படுகிறது என்றாா் சம்பத் ராய்.
அயோத்தியில் ராமா் கோயிலுக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2020, ஆகஸ்ட் 5-இல் அடிக்கல் நாட்டினாா். இக்கோயிலின் 70 ஏக்கா் சுற்றுப்பகுதிக்குள் வால்மீகி, சபரி, ஜடாயு, சீதை, விநாயகா், லக்ஷ்மணன் ஆகியோருக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
2024-இல் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கோயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 23-ஆம் தேதி அயோத்திக்கு வருகை தந்த பிரதமா் மோடி, கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டாா்.
ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளா் சம்பத் ராய், அயோத்தியிலேயே முகாமிட்டு, கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிட்டு வருகிறாா். உச்சநீதிமன்றம் கடந்த 2019-இல் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் ராமா் கோயில் கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்காக இந்த அறக்கட்டளை மத்திய அரசால் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.