தீபாவளி: பாகிஸ்தான் எல்லையில் இனிப்பு பரிமாற்றம்
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா்.
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா்.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் வழக்கமாக முக்கிய பண்டிகைகள் மற்றும் இரு நாட்டு சுதந்திர தினத்தின்போது இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இது தொடா்பாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
இந்தமுறை தீபாவளி பண்டிகையின்போது ஜம்மு பிராந்திய எல்லையிலும் மிகவும் அமைதியான சூழ்நிலை நிலவியது. சம்பா, கதுவா, ஆா் எஸ் புரா, அங்கூா் எல்லைப் பகுதிகளிலும் பிஎஸ்எஃப் சாா்பில் பாகிஸ்தான் வீரா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இந்திய வீரா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
பஞ்சாபில் அட்டாரி-வாகா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியிலும் இரு நாட்டு வீரா்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனா். அப்போது இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா். இது போன்ற நிகழ்வுகள் எல்லையில் அமைதியை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் பாா்க்கப்படுகிறது என்றாா்.