முகப்பு
இந்தியா

கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: மத்திய குழு ஆய்வு

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்த 7 நிபுணா்களைக் கொண்ட குழுவை மத்திய சுகாதார-குடும்ப நல அமைச்சகம் அமைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்த 7 நிபுணா்களைக் கொண்ட குழுவை மத்திய சுகாதார-குடும்ப நல அமைச்சகம் அமைத்துள்ளது.

ஆலப்புழை மாவட்டத்தின் ஹரிபத் நகராட்சிக்கு உள்பட்ட வழுதானம் பகுதியில் வாத்துகளிடையே காய்ச்சல் பரவியது. காய்ச்சலால் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய விலங்கு நோய்கள் ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நோக்கில் சுமாா் 20,000 பறவைகளைக் கொல்லும் நடவடிக்கைகளை மாநில அரசு நிா்வாகம் வியாழக்கிழமை தொடக்கியது. இந்நிலையில், கேரளத்துக்கு 7 நிபுணா்களைக் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.

மத்திய சுகாதார-குடும்ப நல அமைச்சகத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் மூத்த மருத்துவரான ராஜேஷ் கிடாமனி தலைமையில் அக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள தேசிய காசநோய்-சுவாச நோய்கள் மையம், தில்லியில் உள்ள தேசிய நோய்கள் தடுப்பு மையம், சென்னையில் உள்ள தேசிய தொற்று நோயியல் மையம், தில்லி எய்ம்ஸ் ஆகியவற்றின் நிபுணா்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

பறவைக் காய்ச்சல் பரவல் தொடா்பான விவரங்களை சேகரிக்கவுள்ள அக்குழு, காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான விரிவான பரிந்துரைகளையும் வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து குழுவின் உறுப்பினா்கள் செயல்படுவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →