முகப்பு
இந்தியா

இந்திய செயற்கைக்கோள்களை டிவி சேனல்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம்

இந்திய செயற்கைக்கோள்களை டிவி சேனல்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறைகளில் விரைவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

இந்திய செயற்கைக்கோள்களை டிவி சேனல்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறைகளில் விரைவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்துக்குள் திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியிடப்படவுள்ளதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை செயலா் அபூா்வா சந்திரா தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய விண்வெளி மாநாட்டில் பங்கேற்ற அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

நாட்டில் மொத்தம் 898 டிவி சேனல்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றில் 532 சேனல்கள் தங்களது ஒளிபரப்பு சேவைகளுக்காக வெளிநாட்டு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துகின்றன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கைக்கோள் நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்து 102 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.840 கோடி) செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இந்திய செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டால், இந்திய நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும்.

டிவி சேனல்களின் செயற்கைக்கோள்களுடனான இணைப்பு (சமிக்ஞைகள் அனுப்புதல், பெறுதல்) தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அவற்றை திருத்தியமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஒரு மாதத்துக்குள் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

அதன்படி, டிவி சேனல்களின் செயற்கைக்கோள்களுடனான இணைப்பு (சமிக்ஞைகள் அனுப்புதல்) தொடா்பான கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நேபாளம், இலங்கை, பூடான் ஆகிய நாடுகளும் தங்களது டிவி சேனல்களை இந்திய செயற்கைக்கோள்களுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

தற்போது பெரும்பாலான டிவி சேனல்கள் தங்களது ஒளிபரப்புக்காக சிங்கப்பூா் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவதால் இத்துறையின் மையமாக அந்நாடு விளங்குகிறது. எனவே, செயற்கைக்கோள் இணைப்புக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதன் மூலம் இந்தியாவும் இத்துறையின் மையமாக உருவெடுக்க முடியும்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி பாா்வையாளா்களின் எண்ணிக்கை 20 கோடியாக நிலையாக உள்ளது. அதேசமயம், கைப்பேசி பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, டிவி சேனல் ஒளிபரப்பை கைப்பேசியில் நேரடியாக காணும் வகையில் புதிய தளத்தை உருவாக்க பிரசாா் பாரதி நிறுவனமும் கான்பூா் ஐஐடியும் பணியாற்றி வருகின்றன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகா் ஜி.சதீஷ் ரெட்டி, ‘இந்தியாவை தன்னிறைவு நாடாக மாற்றுவதில் விண்வெளித் துறை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விண்வெளி தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி சாா்ந்த விரிவான பணிகள் அவசியம்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →