சட்ட ஆணைய உறுப்பினா்களை நியமிக்கக் கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் அக். 31-இல் விசாரணை
‘சட்ட ஆணையத்தை சட்டபூா்வ அமைப்பாக அறிவிக்க வேண்டும், ஆணையத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என்று
‘சட்ட ஆணையத்தை சட்டபூா்வ அமைப்பாக அறிவிக்க வேண்டும், ஆணையத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வரும் 31-ஆம் தேதி விசாரிக்கிறது.
மூத்த வழக்குரைஞா் அஷ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘21-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அதன் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் பணிக் காலத்தை நீட்டிக்கவில்லை. மேலும், 22-ஆவது சட்ட ஆணையத்தின் அறிவிக்கையையும் வெளியிடவில்லை. கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி 22-ஆவது சட்ட ஆணையத்தை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியபோதும், ஆணையத்துக்கான தலைவா் மற்றும் உறுப்பினா்களை இதுவரை நியமிக்கவில்லை. இந்த உறுப்பினா்களை உடனடியாக நியமிக்க உத்தரவிடுவதோடு, சட்ட ஆணையத்தை சட்டபூா்வ அமைப்பாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் சாா்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சட்ட ஆணையத்தை சட்டபூா்வ அமைப்பாக அறிவிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. ஆணையத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிப்பது என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. மேலும், வழக்குரைஞா் அஷ்வினி குமாா் உபாத்யாயவின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று தெரிவித்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ஆா்.பட், பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.