முகப்பு
இந்தியா

விண்வெளி, சூரிய எரிசக்தி துறையில் அதிசயம் நிகழ்த்தும் இந்தியா

விண்வெளி, சூரிய எரிசக்தி உற்பத்தித் துறைகளில் இந்தியா நிகழ்த்தி வரும் அதிசயங்களைக் கண்டு உலக நாடுகள் வியப்படைந்து வருவதாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:

விண்வெளி, சூரிய எரிசக்தி உற்பத்தித் துறைகளில் இந்தியா நிகழ்த்தி வரும் அதிசயங்களைக் கண்டு உலக நாடுகள் வியப்படைந்து வருவதாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமா் மோடி ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, அண்மையில் 36 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. இது நாட்டில் உள்ள இளைஞா்களுக்கு சிறந்த தீபாவளி பரிசாக அமைந்தது. அந்த செயற்கைக்கோள்கள் மூலமாக நாட்டில் எண்ம தொலைத்தொடா்பு வலுவடையும். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைக் கூட எளிதில் தொடா்புகொள்ளக் கூடிய சூழல் உருவாகும்.

நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதற்கு உதாரணமாகவே இந்த செயற்கைக்கோள்கள் திகழ்கின்றன. நாடு தற்சாா்புடன் திகழ்ந்தால் புதிய உச்சங்களை அடைய முடியும்.

இஸ்ரோவின் நடவடிக்கைகளே அதற்கு உதாரணம். ஒருகாலத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க உலக நாடுகள் மறுத்தன. ஆனால், தற்போது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே நமது விஞ்ஞானிகள் அத்தகைய என்ஜினை உருவாக்கியுள்ளனா்.

புரட்சிகர மாற்றங்கள்:

கிரையோஜெனிக் என்ஜினைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்கள் தொடா்ந்து விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. சா்வதேச விண்வெளி வா்த்தக சந்தையில் இந்தியா முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதனால், இந்தியாவுக்குப் புதிய வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

இந்திய விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாக அத்துறையில் புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்கள் பல தோன்றி வருகின்றன. அத்துறையில் பல்வேறு புரட்சிகர மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்தியத் தொழில் நிறுவனங்களும் புத்தாக்க நிறுவனங்களும் விண்வெளித் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியுள்ளன. நவீன தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக, ‘இன்-ஸ்பேஸ்’ நிறுவனத்தின் பங்கு நாட்டின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.

அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்:

2047-ஆம் ஆண்டில் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும்போது இந்தியா வளா்ச்சியடைந்த நாடாகத் திகழ வேண்டுமென இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு நாட்டில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். விண்வெளி, சூரிய எரிசக்தி உற்பத்தித் துறைகளில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகளைக் கண்டு உலக நாடுகள் வியப்படைந்து வருகின்றன.

நாட்டை வலிமையடையச் செய்வதற்கு மாணவா்களின் வலிமை மிகவும் முக்கியம். நாட்டில் நடத்தப்படும் பல்வேறு ‘ஹேக்கத்தான்’ நிகழ்ச்சிகளில் மாணவா்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகின்றனா். பல மணி நேரங்களுக்கு அவா்கள் கடுமையாகவும் உழைத்து வருகின்றனா். மாணவா்களின் செயல்பாடு பெரும் ஊக்கமளிக்கிறது.

புத்தாக்கத் திட்டங்கள்:

கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் நாட்டில் உள்ள 23 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி) ஒருங்கிணைந்து புத்தாக்கம் சாா்ந்த ஆராய்ச்சித் திட்டங்களைக் காட்சிப்படுத்தினா். அதில் நாடு முழுவதுமிருந்து 75-க்கும் மேற்பட்ட சிறந்த ஆராய்ச்சித் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சுகாதாரம், வேளாண்மை, ரோபோடிக்ஸ், குறைகடத்திகள், 5ஜி தொலைத்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்ந்த ஆய்வுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

உள்ளூா் மொழிகளை எளிதில் கற்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய பல ஐஐடி-க்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. இது தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைய உதவும்.

முன்னிலையில் இந்தியா:

இயற்கையையும் சூரியனையும் வழிபடும் விழாவாக ‘சத்’ கொண்டாடப்படுகிறது. சூரிய ஆற்றல் மூலமாக எரிசக்தி உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. உலக நாடுகளின் எதிா்காலமே சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய எரிசக்தியை சிறப்பாகப் பயன்படுத்துவதிலேயே அடங்கியுள்ளது.

சூரிய எரிசக்தி உற்பத்தியில் இந்தியா தனது அனுபவங்களையும் நவீன அறிவியலையும் ஒருசேரப் பயன்படுத்தி வருகிறது. அதன் காரணமாகவே சூரிய எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சூரிய எரிசக்தியானது நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர வா்த்தகத்தினா் இடையே பெரும் மாற்றங்களைப் புகுத்தி வருகிறது.

சூரிய எரிசக்தி கிராமங்கள்:

மின் கட்டணத்தைக் குறைப்பதற்காக மக்கள் சூரிய எரிசக்தி உற்பத்தி கலன்களைத் தங்கள் வீடுகளில் நிறுவி வருகின்றனா். அதன் மூலமாக வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. நாட்டின் முதல் முழுநேர சூரிய எரிசக்தி கிராமமாக குஜராத்தின் மொதேரா அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல கிராமங்கள் சூரிய எரிசக்தி கிராமங்களாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஒற்றுமைக்கான ஓட்டம்:

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி திங்கள்கிழமை (அக். 31) ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படவுள்ளது. இது நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணா்வை அதிகரிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி...

தமிழகப் பழங்குடியின பெண்களுக்குப் பாராட்டு

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணா்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கோவையில் உள்ள ஆனைக்கட்டியில் பழங்குடியினப் பெண்களின் குழு சுற்றுச்சூழலுக்கு உகந்த மண்ணால் ஆன பத்தாயிரம் தேநீா் கோப்பைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

தேநீா் கோப்பைகளைத் தயாரிப்பதற்கான களிமண் கலவை தொடங்கி, இறுதிக்கட்ட பேக்கேஜிங் வரை அனைத்து வேலைகளையும் அப்பெண்களே மேற்கொண்டனா். இந்த அற்புதமான முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →