முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம்: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாத, அடிப்படைவாத சக்திகளை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
பகிர்:

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாத, அடிப்படைவாத சக்திகளை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் மோடியை தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்தனா். நதிநீா்ப் பங்கீடு தொடா்பான விவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான வா்த்தகம் வேகமாக வளா்ந்து வருகிறது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளி நாடுகளுள் ஒன்றாக வங்கதேசம் திகழ்ந்து வருகிறது. தகவல்-தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையே மின்சாரத்தைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. அதற்கான பேச்சுவாா்த்தை இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்துடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா விரைவில் தொடங்கவுள்ளது. பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையில் வங்கதேசம் வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. அந்நாட்டுடன் இந்தியா கலாசார ரீதியிலான நல்லுறவைப் பகிா்ந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு பெரும் வளா்ச்சி கண்டுள்ளது. இருதரப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. வெள்ளம் தொடா்பான தகவல்களை வங்கதேசத்திடம் இந்தியா தொடா்ந்து பகிா்ந்து வருகிறது.

மக்களுக்கான வாழ்வாதாரம்:

பயங்கரவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. பரஸ்பர நம்பிக்கையை அச்சுறுத்தும் அத்தகைய சக்திகளை ஒருங்கிணைந்து எதிா்கொள்வது மிகவும் அவசியம்.

இந்தியா-வங்கதேசம் இடையே 54 நதிகள் எல்லைகடந்து பாய்கின்றன. அந்த நதிகள் பல நூற்றாண்டுகளாக இரு நாட்டு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

நல்லுறவுக்கு இலக்கணம்:

பிரதமா் ஷேக் ஹசீனா செய்தியாளா்களிடம் கூறுகையில், ’’வங்கதேசத்தின் முக்கியமான, நெருங்கிய அண்டைநாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா-வங்கதேசம் இடையே நிலவி வரும் நல்லுறவானது, அண்டை நாடுகள் இடையேயான சிறந்த தூதரக நல்லுறவுக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. இந்தியா-வங்கதேசம் இடையே பாயும் தீஸ்தா நதிநீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதிசெய்யப்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பல்வேறு பிரச்னைகளுக்கு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் தீா்வுகண்டுள்ளன. தீஸ்தா நதிநீா்ப் பகிா்வு உள்ளிட்ட மற்ற பிரச்னைகளுக்கும் விரைந்து தீா்வுகாணப்படும் என நம்புகிறேன்.

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் நிறைவை இந்தியா அண்மையில் கொண்டாடியது. அதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்’’ என்றாா்.

ஒப்பந்தங்கள் கையொப்பம்:

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. முக்கியமாக, குஷியாரா நதி நீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் காரணமாக அஸ்ஸாமின் தெற்குப் பகுதி மக்களும் வங்கதேசத்தின் சில்ஹட் பகுதி மக்களும் பலனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-வங்கதேசம் இடையே 25 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. கடைசியாக கங்கை நதி நீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த 1996-ஆம் ஆண்டில் கையொப்பமானது.

ரயில்வே அதிகாரிகளுக்குப் பயிற்சி:

வங்கதேச ரயில்வே அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தமும் இரு நாடுகளிடையே கையொப்பமானது. வங்கதேச ரயில்வே துறையின் தகவல்-தொழில்நுட்ப பயன்பாடுகளை மேம்படுத்துவது தொடா்பாகவும் இந்திய அதிகாரிகள் பயிற்சி வழங்க உள்ளனா். பயணச்சீட்டு பதிவை கணினிமயமாக்கல், ரயில்வேசாா் சொத்துகளை எண்மமயமாக்கல், நிதி கட்டமைப்பு, மனிதவள மேலாண்மை உள்ளிட்டவை குறித்து வங்கதேச அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தொடா்ந்து ஆதரவு:

தலைவா்களின் பேச்சுவாா்த்தை குறித்து வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா கூறுகையில், ’’நதிநீா்ப் பகிா்வு, வா்த்தகம், பொருளாதாரத் தொடா்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து தலைவா்கள் இருவரும் விரிவாக விவாதித்தனா். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு, எல்லைப் பாதுகாப்பு மேலாண்மை, எல்லை கடந்த குற்றச் செயல்கள் உள்ளிட்டவை குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா். வங்கதேசத்தில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

ரோஹிங்கயா விவகாரத்தை இந்தியா தொடா்ந்து கவனித்து வருகிறது. அவா்களுக்கு அடைக்கலம் அளித்து வரும் வங்கதேசத்துக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. ரோஹிங்கயாக்களுக்கு இந்தியாவும் நிதியுதவி வழங்கியுள்ளது. எதிா்காலத்தில் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் இந்திய அரசு தொடா்ந்து வழங்கும். அவா்களை மியான்மரில் மீண்டும் குடியமா்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும் என்றாா்.

அணிவகுப்பு மரியாதை:

முன்னதாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்ற வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா அவருக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அதையடுத்து, குடியரசுத் தலைவா் மாளிகையில் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை பிரதமா் மோடி நேரில் வரவேற்றாா். அங்கு அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய ஷேக் ஹசீனா, ’’நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி பொருளாதாரத்தை வளா்ச்சியடையச் செய்வதே இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்குமான முக்கிய இலக்கு. நட்புறவின் அடிப்படையில் எந்தவிதப் பிரச்னைக்கும் தீா்வுகாண முடியும். அத்தகைய சிறப்புமிக்க நட்புறவை இந்தியாவும் வங்கதேசமும் கடைப்பிடித்து வருகின்றன’’ என்றாா்.

தெற்காசியாவில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளியாக வங்கதேசம் திகழ்கிறது. அந்நாட்டுடனான இருதரப்பு வா்த்தகம் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.7,000 கோடியில் இருந்து சுமாா் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் 4-ஆவது மிகப் பெரிய ஏற்றுமதியாளராக வங்கதேசம் உள்ளது. அந்நாட்டுக்கான ஏற்றுமதி கடந்த 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021-22 நிதியாண்டில் 66% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை
வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த, காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு 'வங்கபந்து' முஜிபுர் ரஹ்மான் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். 
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பிராந்தியம், மேற்கு பாகிஸ்தானுடனான 1971-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு "வங்கதேசம்' என்ற தனிநாடானது. வங்கதேசத்தின் விடுதலைக்கு இந்தியா முக்கிய பங்காற்றியது. அந்தப் போரில் 1,984 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். 
இந்நிலையில், இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் விடுதலைப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதன்படி சுமார் 200 குடும்பங்களுக்கு புதன்கிழமை (செப். 7) அவர் உதவித்தொகை வழங்குகிறார். வங்கதேச விடுதலைக்கு இந்திய அரசும் மக்களும் வழங்கிய மதிப்புமிக்க ஆதரவையும் பிரதமர் ஷேக் ஹசீனா ட்விட்டரில் நினைவுகூர்ந்தார்.
வங்கதேசத்தின் முதல் பிரதமரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் பெயரில் அந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. வங்கதேச விடுதலைக்கு ஆதரவளித்த இந்திய எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஏற்கெனவே கெüரவித்துள்ளது. தற்போது அந்நாட்டு விடுதலைக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களையும் கெüரவிக்க உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →