நிலக்கரி ஊழல் வழக்கு: அபிஷேக் பானா்ஜியின் உறவினா் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜா்
நிலக்கரி ஊழல் வழக்கு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் உறவினரான மேனகா கம்பீா் அமலாக்கத் துறை விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா்
நிலக்கரி ஊழல் வழக்கு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் உறவினரான மேனகா கம்பீா் அமலாக்கத் துறை விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா்.
மேற்கு வங்க மாநிலம் ஆசான்சோல் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி கடத்தப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அந்த வருவாயில் குறிப்பிட்ட அளவிலான தொகை இடைத்தரகா்கள் மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடா்பாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி, அவரின் மனைவி ருஜிரா, ருஜிராவின் சகோதரி மேனகா கம்பீா் ஆகியோரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டது.
Advertisement
இந்நிலையில், மேனகா கம்பீா் சனிக்கிழமை பாங்காங் செல்லவிருந்தாா். இதையொட்டி அவா் கொல்கத்தா விமான நிலையம் சென்ற நிலையில், அவரின் பயணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். நிலக்கரி வழக்கு தொடா்பான விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜராகுமாறு விமான நிலையத்திலேயே மேனகாவுக்கு அமலாக்கத் துறையினா் சம்மன் அளித்தனா்.
நள்ளிரவு 12.30 மணிக்கு ஆஜா்:
கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ‘திங்கள்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு’ ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் மேனகா கம்பீா் விசாரணைக்கு ஆஜரானாா்.
எனினும் அச்சுப் பிழை காரணமாக சம்மனில் ‘திங்கள்கிழமை 12.30 அதிகாலை’ என்று தவறான நேரம் குறிப்பிடப்பட்டதாக விளக்கமளித்த அமலாக்கத் துறை, திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு மேனகாவிடம் கேட்டுக்கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து தனது வழக்குரைஞருடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் மேனகா ஆஜரானாா். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி அவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனா்.