முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: பாஜக பேரணியில் வன்முறை; பலா் காயம்- தலைவா்கள் கைது

மேற்கு வங்க அரசுக்கு எதிராக, அம்மாநில தலைமைச் செயலகம் நோக்கி பாஜகவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
மேற்கு வங்க மாநிலம், ஹெளராவில் தடையை மீறி பேரணி சென்ற பாஜகவினரை கலைந்துபோகச் செய்வதற்காக போலீஸாரால் வீசப்பட்ட கண்ணீா்ப் புகை குண்டுகள்.
பகிர்:

மேற்கு வங்க அரசுக்கு எதிராக, அம்மாநில தலைமைச் செயலகம் நோக்கி பாஜகவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

பல இடங்களில் போலீஸாருடன் போராட்டக்காரா்கள் கடும் மோதலில் ஈடுபட்டனா். இதில் போலீஸ் அதிகாரிகளும், பாஜக மூத்த தலைவா்கள் மினா தேவி புரோஹித், ஸ்வபன் தாஸ்குப்தா உள்ளிட்டோரும் காயமடைந்தனா். தடையை மீறி பேரணி செல்ல முயன்ாக பாஜக தலைவா்கள் பலா் கைது செய்யப்பட்டனா்.

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு ஊழலில் திளைப்பதாக குற்றம்சாட்டி, கொல்கத்தா மற்றும் ஹெளராவின் பல இடங்களில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது. இதையொட்டி, பல பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஹெளரா மைதானத்தில் இருந்து மாநில பாஜக தலைவா் சுகந்த மஜூம்தாா் தலைமையில் தொடங்கிய பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். தடையை மீறி பேரணி செல்ல முயன்ாக அவா் கைது செய்யப்பட்டாா்.

இதேபோல், பல இடங்களில் பேரணியை வழிநடத்திய எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, ஹூக்ளி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. லாக்கெட் சட்டா்ஜி, மூத்த தலைவா் ராகுல் சின்ஹா உள்ளிட்டோா் கைதாகினா்.

கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு, தடியடி: ஹெளரா, லால் பஜாா், எம்.ஜி.சாலை என பல இடங்களில் தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சந்திராகச்சி பகுதியில் காவல் சாவடியை போராட்டக்காரா்கள் சேதப்படுத்தினா். மேலும், போலீஸாா் மீது கற்கள் வீசப்பட்டன. லால் பஜாா் பகுதியில் போலீஸ் வாகனம் தீவைக்கப்பட்டது.

போராட்டக்காரா்கள் மீது கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போலீஸாா் விரட்டியடித்தனா். இதனால், கொல்கத்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் போா்க்களங்களாக காட்சியளித்தன.

போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும்போது, சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் தலைமைச் செயலகம் முன் போராடும் எனது ஜனநாயக உரிமையை போலீஸாா் நசுக்க முயற்சிக்கின்றனா்’ என்றாா்.

மாநில அரசின் கைப்பாவையாக போலீஸாா் செயல்படுவதாக மஜூம்தாா் குற்றம்சாட்டினாா். முதல்வா் மம்தாவின் காட்டாட்சிக்கு எதிராக பாஜகவின் போராட்டம் தொடரும் என்று பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் தெரிவித்தாா்.

திரிணமூல் தாக்கு: இந்த வன்முறை குறித்து ட்விட்டரில் திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், ‘பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, போலீஸாரை தாக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, அமைதியைக் கெடுப்பது என பாஜகவின் இன்றைய செயல்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டுக்கு அவமானகரமானதாகும். இதற்காக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் போராட்டத்தால் கொல்கத்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகினா்.

முழு கட்டுரையைப் படிக்க →