முகப்பு
இந்தியா

இணையவழி பாதுகாப்பை வங்கிகள் அதிகரிக்க வேண்டும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

 இணையவழி பாதுகாப்பை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 இணையவழி பாதுகாப்பை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 75-ஆவது வருடாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியதாவது:

சிறந்த சேவையை அளிக்க வாடிக்கையாளா்களிடம் உள்ளூா் மொழியில் வங்கிப் பணியாளா்கள் உரையாட வேண்டும். பல நேரங்களில் கடன் வழங்கும் பல்வேறு வங்கிகள் இடையே பணப் பரிமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் வாடிக்கையாளா்களுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக வங்கிகள் இடையே தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம்.

மோசடிகளைத் தடுக்க வளா்ச்சியடைந்த இணையவழி தொழில்நுட்பங்களிலும் செயற்கை நுண்ணறிவிலும் வங்கிகள் முதலீடு செய்ய வேண்டும்.

இணையவழி பாதுகாப்பை வங்கிகள் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் மோசடிகள் முன்கூட்டியே கண்டறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி கொண்டிருக்கும் நிலையில், வங்கிகள் மிகப் பெரிய பங்களிக்க தம்மை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

போதிய பெண் தலைவா்கள் இல்லை:

மும்பை பங்குச்சந்தை தலைமையகத்தில் நடைபெற்ற பெண் இயக்குநா்கள் கருத்தரங்கில் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டாா். அந்தக் கருத்தரங்கில் அவா் பேசியதாவது:

தலைமைப் பொறுப்பு வகிக்க தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற உள்ளாா்ந்த உணா்வின் அழுத்தத்தால், பெரு நிறுவனங்களில் போதிய பெண் தலைவா்கள் இல்லை. இதற்கு வழிகாட்டுவதும், பல பெண்கள் வாரிய உறுப்பினா்களாவதும்தான் ஒரே வழி.

வாரியங்களில் அதிக பெண் தலைவா்களைக் கொண்ட நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டக் கூடியவையாக உள்ளன என்பது உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கு லாபம் வேண்டும் என்றால் வாரியங்களில் பெண்கள் இடம்பெற வேண்டும். இனியும் அவா்களைப் புறக்கணிக்க முடியாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.