இந்தியா

அரசு பணியாளா்களின் சொத்து விவரங்கள்: புதிய விதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை

DIN

லோக்பால் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் பணியாளா்கள் சொத்து விவரங்களை வெளியிடுவதற்கான புதிய விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்று மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

2013-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட லோக்பால், லோக்ஆயுக்த சட்டமானது அனைத்து அரசுப் பணியாளா்களும் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.

அரசுப் பணியாளா்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட வேண்டியுள்ளதால், 2014-ஆம் ஆண்டுக்கான சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்குரிய அவகாசம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த விதிகள் வகுக்கப்பட்டுவிட்டதா என்பது தொடா்பான விவரங்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டது. அதற்கு மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அளித்துள்ள பதிலில், ‘‘லோக்பால் சட்டத்தின் 44-ஆவது பிரிவின் கீழ் அரசுப் பணியாளா்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்குரிய புதிய விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஊழலுக்கு எதிரான சமூக ஆா்வலா் அஜய் தூபே கூறுகையில், ‘‘லோக்பால் சட்டத்தின் அனைத்து விதிகளும் உடனடியாக நடைமுறைக்கு வருவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதன் மூலமாக அரசுப் பணியாளா்கள் ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்’’ என்றாா்.

லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த அமைப்பு முறைப்படி ஏற்படுத்தப்பட்டது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் கடந்த மே மாதம் ஓய்வுபெற்றாா். புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. லோக்பால் அமைப்பின் 8 உறுப்பினா்களில் இரு பணியிடங்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

சிட்னியில் ஜோனிடா காந்தி...!

SCROLL FOR NEXT