இந்தியா

பிரதமரின் இலவச ரேஷன் பொருள்கள் திட்டம்: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

DIN

பிரதமரின் இலவச ரேஷன் பொருள்கள் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

சுமாா் 80 கோடி ஏழை மக்களுக்கு ரேஷனில் மாதந்தோறும் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கும் இத்திட்டம் வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவிருந்த நிலையில், டிசம்பா் 31-ஆம் தேதி வரை தொடரவுள்ளதாக மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

நிகழாண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்கள் நடைபெறும் நிலையில், பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த 2020, ஏப்ரலில் கரோனா முழு அடைப்பின்போது ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு நபா் ஒருவருக்கு மாதந்தோறும் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போது 6-ஆவது முறையாக திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.3.45 லட்சம் கோடி செலவு: ‘இலவச ரேஷன் பொருள் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.3.45 லட்சம் கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது. தற்போது திட்ட நீட்டிப்பால் ரூ.44,762 கோடி கூடுதல் செலவாகும். அக்டோபா் 1 முதல் அடுத்த 3 மாதங்களுக்கு 122 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளன. திட்டத்தின் ஒட்டுமொத்த விநியோகம் 1,121 லட்சம் டன்களை எட்டும்’ என்றாா் அனுராக் தாக்குா்.

தேசிய புள்ளியியல் அலுவலக தகவல்படி, நுகா்வோா் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆகஸ்டில் 7.62 சதவீதமாக அதிகரித்தது. அதற்கு முந்தைய மாதத்தில் 6.69 சதவீதமாக இருந்தது. பருவம் தவறிய மழையால் இந்த ஆண்டு காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி 106.99 மில்லியன் டன்களாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த பயிா் ஆண்டில் கோதுமை உற்பத்தி 106.88 மில்லியன் டன்களாக குறைந்திருந்தது.

அரசின் உணவு தானிய கையிருப்பு குறித்து கவலைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இலவச ரேஷன் பொருள் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 கோடியில் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு: புது தில்லி, அகமதாபாத், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் ஆகிய ரயில் நிலையங்களை பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

அதேபோல், தினமும் 50 லட்சம் பயணிகள் வந்து செல்லும் 199 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது; இதற்கு 60,000 கோடி செலவாகும் என்றாா் அனுராக் தாக்குா்.

பிரதமர் மோடி பெருமிதம்

இலவச ரேஷன் பொருள் திட்டம் நீட்டிப்பால் கோடிக்கணக்கானோர் பயன் பெறுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
தற்போதைய விழாக் காலத்தில் மக்களுக்கான ஆதரவை இத்திட்டம் உறுதி செய்யும் என்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 80 கோடி பேர் பலனடைந்து வரும் இலவச ரேஷன் பொருள் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
அதேபோல், புதுதில்லி, அகமதாபாத், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் ஆகிய ரயில் நிலையங்களை ரூ.10,000 கோடியில் மேம்படுத்தும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. "இந்தியாவின் உள்கட்டமைப்பு எதிர்காலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில், மேற்கண்ட திட்டம் அரசின் தொலைநோக்கு பார்வையை எதிரொலிக்கிறது. 3 ரயில் நிலையங்களும் நவீனப்படுத்தப்படும். இது மக்களின் வாழ்வை மேலும் எளிதாக்கும்' என்றார் பிரதமர் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT