பேரறிவாளனை மத்திய அரசு ஏன் விடுவிக்க முடியாது? உச்சநீதிமன்றம் கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறைத் தண்டனை அனுபவித்துள்ள ஏ.ஜி.பேரறிவாளனை ஏன் மத்திய அரசு விடுவிக்க முடியாது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறைத் தண்டனை அனுபவித்துள்ள ஏ.ஜி.பேரறிவாளனை ஏன் மத்திய அரசு விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
மேலும், அவரை விடுவிக்க மாநில அமைச்சரவை எடுத்த முடிவு மீது உரிய முடிவை எடுக்க உரிய அதிகார அமைப்பாக இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாக அரசு விநோதமான முடிவு எடுத்திப்பதாகவும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவிவேதி, "இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் தண்டனை குறைக்கப்பட்டு தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. மத்திய அரசுதான் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்வுகளை செயல்படுத்தாமல் இருக்க முயற்சி செய்கிறது. மாநில அமைச்சரவையின் உதவி, ஆலோசனையின் பேரில் ஆளுநர் செயல்படும் கடமை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 161-இன்கீழ் கருணை மனுக்களை முடிவு செய்வதில் ஆளுநரின் தனிப்பட்ட திருப்தி பயனற்றதாகும். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார்' என்றார்.
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் வாதிடுகையில், "இதுபோன்ற சூழலில் குடியரசுத் தலைவர்தான் உரிய முடிவெடுக்கும் அதிகார அமைப்பாவார். அதிலும் குறிப்பாக மரண தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்கும் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க முடியாது. அரசியல் சாசனத்தின் 72-ஆவது பிரிவானது, கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர்தான் உரிய தகுதிக்குரியவர் என தெளிவுபடுத்துகிறது' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: தண்டனை பெற்ற மனுதாரர் இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். குறைந்த தண்டனைக் காலத்தை கழித்தவர்கள் விடுவிக்கப்படும் போது, இவரை விடுவிக்க மத்திய அரசு ஏன் சம்மதிக்க முடியாது? அரசமைப்புச்சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ், கருணை மனு மீது முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநர் வரம்பில் இல்லை என்று நீங்கள் வாதிடுவது, அரசமைப்பின் கூட்டாட்சி அமைப்பு மீதான அடியாகும். எந்த ஆதாரம் அல்லது விதியின் கீழ் மாநில அமைச்சரவையின் முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க முடியும்? வேண்டுமெனில், ஒருவரை விடுவிக்கும் மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் அதை மீண்டும் அமைச்சரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும். ஆனால், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.
ஆளுநரின் நடவடிக்கை தவறானது என முகாந்திரம் இருப்பதாகக் கருதுகிறோம். உங்கள் வாதமும் அரசமைப்புக்கு முரணாக உள்ளது. மாநில அமைச்சரவையின் உதவி, ஆலோசனையின்படி ஆளுநர் செயல்படும் கடமைப்பட்டவர் ஆவார். மத்திய அரசின் சமர்ப்பிப்பை ஏற்றுக் கொண்டால், அது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதான தாக்குதலாக இருக்கும். இதுபோன்ற குறிப்பிட்ட சில சூழல்களில், 161-ஆவது பிரிவின் கீழ் உள்ள விஷயங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்று அரசியலமைப்பு மீண்டும் எழுதப்பட வேண்டியிருக்கும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆளுநர் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பது விநோதமானதாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த விதியின் கீழ் ஆளுநர் இந்த வழக்கை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளார்? இதை அனுப்புவதற்கு அவரை அனுமதிக்கும் அத்தகைய அதிகாரத்தின் ஆதாரம் என்ன? 161-ஆவது பிரிவை கவனமாகப் படித்தால், ஆளுநர் தனது அதிகாரங்களை சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவரும். ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல்களை பெற்று வர வேண்டும். நாங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்போம் என்று நீதிபதிகள் அமர்வு கருத்துத் தெரிவித்தது.
மேலும், பேரறிவாளன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசின் வழக்குரைஞருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, "அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை காலக்கெடுவாக மாற்றுவது குறித்தும் இந்த நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை மே 4-ஆம் தேதி முதல் வழக்காக பட்டியலிட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.