மாநிலங்களும் இலக்கு நிா்ணயிக்க வேண்டும்: நரேந்திர மோடி
இந்திய பொருளாதாரத்தின் மதிப்பை 5 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.390 லட்சம் கோடி) உயா்த்த மாநிலங்களும் இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
இந்திய பொருளாதாரத்தின் மதிப்பை 5 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.390 லட்சம் கோடி) உயா்த்த மாநிலங்களும் இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் கடைசி நாளான புதன்கிழமை பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வளா்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை வளா்ச்சியடையச் செய்யும் பொருட்டு சிறப்புத் திட்டத்தை 2018-ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டம் பெரும் பலனை அளித்துள்ளது. திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 112 மாவட்டங்களும் தற்போது ‘ஊக்கம்தரும் மாவட்டங்களாக’ மாறியுள்ளன. அதேபோன்ற வளா்ச்சித் திட்டத்தை மண்டல அளவிலும் நகர அளவிலும் செயல்படுத்த வேண்டும்.
வளா்ந்து வரும் மாவட்டங்களில் இளம் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அவா்களது ஆக்கபூா்வ சிந்தனைகளும் புத்தாக்க யோசனைகளும் மாவட்டத்தின் வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவும். இளம் அதிகாரிகள் பெறும் அனுபவமானது ஒட்டுமொத்த நாட்டின் வளா்ச்சிக்கும் பங்களிக்கும்.
ஆசிரியா்களுக்குப் பயிற்சி:
எண்ம தொழில்நுட்பங்கள், செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்துவது தொடா்பாக ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். விருதுவென்று பணிஓய்வு பெற்ற ஆசிரியா்களைப் பள்ளிகளுக்கு மீண்டும் அழைத்து பணியில் உள்ள ஆசிரியா்களுக்குப் பயிற்சி வழங்கலாம்.
நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவா்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கல்வி சாா்ந்த தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கையை 200-ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தனி தொலைக்காட்சி சேனலையும் தொடங்கலாம்.
நாடகம், இயங்குபடம் (அனிமேஷன்) உள்ளிட்டவற்றின் வாயிலாகத் தரமான பாடங்களைத் தயாரிக்கும் வகையில் இளையோரிடையே போட்டிகளை நடத்தலாம்.
5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரமாக்க...: ஒவ்வொரு மாநிலமும் தனது பலத்தை உணா்ந்து இலக்குகளை நிா்ணயிக்க வேண்டும். அந்த இலக்குகளை அடைய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இது 5 ட்ரில்லியன் டாலா் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடாக இந்தியா உயா்வதற்கு அவசியம்.
உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்: எதிா்க்கால வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நகா்ப்புறங்கள் முக்கியப் பங்கு வகுக்கும். எனவே நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். புதுமையான முறையில் நகா்ப்புற திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடிகளை ஒருங்கிணைக்க முயற்சி: தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைய தொடக்கப் பள்ளிகளுடன் அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைக்க மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும்.
முதலீட்டை ஈா்க்க...: நாட்டில் முதலீடுகளை ஈா்க்கப் பிரதமரின் உத்வேகம் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். மாநிலங்களில் அனைத்து துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் தமக்கு தேவையான பொருள்களை வாங்க அரசின் இணையவழி சந்தை (ஜிஇஎம்) வலைதளத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இது நேரத்தையும் செலவையும் குறைக்கும்.
காலிப் பணியிடங்களை நிரப்புக: அனைத்து மாநிலங்களிலும் துறை ரீதியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அரசுத் திட்டங்களிலும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றாா் பிரதமா்.
நிதி ஆயோக் நிா்வாகக் கவுன்சில் கூட்டம்: வேளாண்மை, கல்வி மற்றும் நகா்ப்புற நிா்வாகத்துக்கான திட்டமிடல் நிதி ஆயோக் நிா்வாகக் கவுன்சில் கூட்டம் மூலம் உறுதிப்படுத்தப்படும். அந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொள்வா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் விவாதம்:
மாநாட்டின்போது கலப்புப் பயிரிடுதல், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்தியில் தற்சாா்பு அடைதல், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல் உள்ளிட்டவை தொடா்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், மத்திய-மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிஎம்-கதிசக்தி திட்டம் வாயிலாகக் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின்போது பல்வேறு பிரச்னைகளுக்கான தீா்வுகளையும் அனுபவங்களையும் மாநிலங்கள் பகிா்ந்து கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.