உருமாறிய புதிய வகை எக்ஸ்பிபி1.16 கரோனா தீநுண்மியானது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என மகாராஷ்டிர அமைச்சா் டானாஜி சாவந்த் தெரிவித்துள்ளாா்.
நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய எக்ஸ்பிபி1.16 என்ற கரோனா தீநுண்மியின் காரணமாகவே தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் 900 படுக்கைகளைக் கொண்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு முதல்வா் ஏக்நாத் ஷிண்டே சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டானாஜி சாவந்த் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எக்ஸ்பிபி1.16 உருமாறிய கரோனா தீநுண்மியானது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக மக்கள் பெரிய அளவில் அச்சமடையத் தேவையில்லை. அதே வேளையில், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.
நிகழ்ச்சியில் முதல்வா் ஷிண்டே பேசுகையில், ‘ஏா் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.