காங்கிரஸின் 5வது வாக்குறுதி: பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் மக்களுக்கு நான்கு வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். அந்த வாக்குறுதிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் செயல்படுத்தப்படும். பிரதமர் மோடி காங்கிரஸின் நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது எனக் கூறியுள்ளார். நான் அந்த நான்கு வாக்குறுதிகளுடன் மேலும் ஒரு வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். அதனால், நாங்கள் 5 வாக்குறுதிகளை மக்களுக்காக நிறைவேற்ற உள்ளோம். இந்த ஐந்தாவது வாக்குறுதி பெண்களுக்கானது. பிரதமர் மோடி கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இந்த வாக்குறுதியும் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே நிறைவேற்றப்படும். உங்களது பாஜக அரசு கர்நாடக மாநிலப் பெண்களின் பணத்தை அவர்களிடமிருந்து 40 சதவிகித கமிஷனுடன் கொள்ளையடித்துள்ளது. இதுதான் உங்களுடைய வேலை. நாங்கள் அரசின் பணத்தை பெண்களுக்காக வழங்குகிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பேருந்துகளில் பெண்கள் பணம் கொடுத்து பயணம் செய்வதை உங்களால் பார்க்க முடியாது என்றார்.
முன்னதாக, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாத உதவித் தொகையாக ரூ.2000, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர் நபர் ஒன்றுக்கு 10 கிலோ இலவச அரிசி, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.