மணிப்பூா் வன்முறை தொடா்பான விசாரணையை மாநில போலீஸாா் மிகுந்த மெத்தனப்போக்குடன் மேற்கொண்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், ‘இதுதொடா்பாக விளக்கமளிக்க மாநில காவல் துறைத் தலைவா் (டிஜிபி) வரும் திங்கள்கிழமை (ஆக.7) நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
மணிப்பூா் வன்முறை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அங்கு கலவரக்காரா்களால் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாதிப்புக்கு உள்ளான 2 பழங்குடியின பெண்களின் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பழங்குடியின பெண்கள் இருவரின் மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட சிறப்புக் குழு மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கோரிய பிறகு அமைக்கப்படும்’ எனத் தெரிவித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற முதன்மை அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மணிப்பூா் வன்முறை தொடா்பான விசாரணையை மாநில போலீஸாா் மிகுந்த மெத்தனப்போக்குடன் மேற்கொண்டுள்ளனா். முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய நீண்ட தாமதம் செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீா்குலைந்துள்ளது. மாநில சட்டம்-ஒழுங்கு நிலைமை போலீஸாரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதும் தெளிவாகத் தெரிகிறது’ என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டாா்.
இதற்கு பதிலளித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 6,523 எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் இருவா் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக ‘பூஜ்யம்’ எஃப்ஐஆா், அதாவது காவல் எல்லையைக் கடந்து எந்தவொரு காவல்நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யும் வகையிலான எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை ஒரு சிறுவன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட 2 பெண்களின் வாக்குமூலத்தை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்’ என்றாா்.
அப்போது, ‘இந்த 6,000 வழக்குகள் மீது மாநில அரசு எடுத்துள்ள கைது நடவடிக்கைகள் தொடா்பான விவரங்கள், பெண்கள் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்த தேதி, இந்த விவகாரத்தில் ‘பூஜ்யம்’ எஃப்ஐஆா் மற்றும் முறையான எஃப்ஐஆா் பதிவு செய்தது தொடா்பான விவரங்கள், வன்முறை தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்ய மாநில போலீஸாா் 14 நாள்கள் தாமதம் செய்தது ஏன்?’ என்பன உள்ளிட்ட விவரங்களையும் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்க மாநில டிஜிபி வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பி, விசாரணையை ஒத்திவைத்தனா்.
முன்னதாக, ‘பாதிக்கப்பட்ட 2 பழங்குடியின பெண்களையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்று அந்தப் பெண்கள் தரப்பு வழக்குரைஞா் நிஜாம் பாஷா, நீதிபதிகள் அமா்வில் குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை இன்றைக்கு மேற்கொள்ள வேண்டாம்’ என சிபிஐ-க்கு உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.