மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பாஜக அரசுக்கு ஆதரவளிக்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டுமெனக் கோரி ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேசவைக்கும் நோக்கில் மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர். மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இதனை ஏற்றுக் கொண்டுள்ளாா். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் யாருக்கு ஆதரவு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க | பரபரப்பாகும் கூட்டணி அரசியல்! மதில் மேல் பூனைகளாக 11 கட்சிகள்!
இந்நிலையில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு ஆதரவளிக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடி, பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியின் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்க பிஜேடி ஒப்புக்கொண்டதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தில்லி அரசுக்கு எதிரான அவசரச் சட்டம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.
பாஜகவும் பிஜேடி கட்சியும் சில விஷயங்களில் முரண்பட்டாலும் மத்திய அரசு என்று வரும்பட்சத்தில் நவீன் பட்நாயக், பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்கும்பட்சத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பிஜேடி ஆதரவளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல ஆந்திரத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.