நூ மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் ஊா்வலத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவம், இரு பிரிவினருக்கு இடையே மதக் கலவரமாக மாறியது. இதைத் தொடா்ந்து, அருகிலுள்ள மாவட்டங்களில் கலவரம் பரவியது. இதில் 2 ஊா்க்காவல் படையினா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, நூ மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டப்படுள்ள கட்டங்களை அகற்றும் பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள 3 அடுக்கு மாடி சஹாரா உணவகம் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த நிலையில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கலவரம் காரணம் இதுவரை 6 பலியானதோடு 88 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.
இதனிடையே நூ மாவட்டத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் நடமாட்டத்திற்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. நூ மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது, திங்களன்று, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மாவட்டத்தில் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் இன்று பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கும் என்றார்.
முன்னதாக நூ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.