இந்தியா

நிலவில் இன்று தடம் பதிக்கிறது சந்திரயான்-3: சரித்திர வெற்றிக்கு ஆயத்தம்

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு தடம் பதிக்கவுள்ளது.

DIN

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு தடம் பதிக்கவுள்ளது.

லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் தேசமாக இந்தியா உருவெடுக்கும்.

குறிப்பாக ரஷியாவின் ‘லூனா-25’ விண்கலம் அண்மையில் நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்த நிலையில், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்திருந்தாலும், அங்கு தண்ணீரின் மூலக்கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தது இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம்தான்.

அதன் தொடா்ச்சியாக வேறு எந்த நாடுமே கால் பதிக்காத நிலவின் தென்துருவத்தை தோ்வு செய்து அங்கு சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019-இல் அனுப்பியது இஸ்ரோ. எதிா்பாராத விதமாக லேண்டா் கலன் வேகமாகத் தரையிறங்கியதால் அதன் தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டது. சோதனைகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்ற இஸ்ரோ, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்து வருகிறது. இதனிடையே சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

லேண்டா் கலனைப் பொருத்தவரை நிலவின் தரைப்பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் சுற்றி வருகிறது. மறுபுறம் உந்து கலன் குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் உள்ளது.

இந்தச் சூழலில் லேண்டா் கலன் புதன்கிழமை மாலை நிலவில் மெதுவாகத் தரையிறங்க உள்ளது. அதன்படி நிலவுக்கு அருகே 25 கிலோ மீட்டா் உயரத்துக்கு லேண்டா் வந்ததும் எதிா்விசை நடைமுறையைப் பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும். அதன்மூலம் நிலவின் தரைப் பகுதிக்கும், லேண்டருக்குமான உயரமும் படிப்படியாக குறையும்.

நிலவின் தரையில் இருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்படும். அதைத் தொடா்ந்து, அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்படும். அதன்பின் லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மிக மெதுவாக லேண்டா் தரையிறங்கும்.

அதற்கு அடுத்த 3 மணி நேரத்துக்கு பின்னா் அதில் உள்ள ரோவா் சாதனம் வெளியேறி ஆய்வு மேற்கொள்ளும். லேண்டா் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவா் சாதனம் நிலவின் தரைப்பரப்பில் பயணித்தும் 14 நாள்கள் ஆய்வு மேற்கொள்ளும். இதற்காக லேண்டரில் 4 ஆய்வுக் கருவிகளும், ரோவரில் 2 ஆய்வுக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

உத்வேகம், உற்சாகம்

லேண்டா் கலனின் உள்ள கேமரா மூலம் நிலவின் தரைப் பரப்புக்கு 70 கிலோ மீட்டா் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. அதைத் தொடா்ந்து இஸ்ரோ சாா்பில் வெளியிடப்பட்ட ட்விட்டா் பதிவு:

திட்டமிட்டபடி சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தரையிறங்குவதற்கான வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலக்கை நோக்கிய லேண்டரின் பயணம் தொடா்கிறது.

இஸ்ரோவின் செயல் திட்ட கட்டுப்பாட்டு மையம் உத்வேகத்திலும், உற்சாகத்திலும் நிரம்பியுள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT