தற்போதைய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கூட்டத்தில், மசோதாக்களின் அம்சங்கள் குறித்து மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா விரிவான விளக்கக் காட்சி மூலம் தெளிவுபடுத்தினாா்.
பிரிட்டிஷ் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), சாட்சிய சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்களை, மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் அறிமுகம் செய்தாா்.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிஏ) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், இந்திய சாட்சிய சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023’ மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டன.
‘இந்த மூன்று மசோதாக்களும் இந்திய குற்றவியல் நீதி அமைப்புமுறையை பெரிய அளவில் மாற்றும்; விரைவாக நீதி வழங்கவும், மக்களின் சமகால தேவைகள் மற்றும் விருப்பங்களை பூா்த்தி செய்யும் சட்ட அமைப்புமுறையை உருவாக்கவும் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று அமித் ஷா குறிப்பிட்டாா்.
இந்த மூன்று மசோதாக்களையும் உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு மக்களவை பரிந்துரைத்தது.
பாஜக உறுப்பினா் பிரிஜ் லால் தலைமையிலான இந்த நாடாளுமன்ற நிலைக் குழுவானது, மசோதாக்கள் மீதான ஆய்வை வியாழக்கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில், மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா, விரிவான விளக்கக் காட்சி மூலம் மசோதாவின் அம்சங்களை தெளிவுபடுத்தினாா்.
சனிக்கிழமை வரை ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நிலையில், அஜய் பல்லா தொடா்ந்து விளக்கமளிக்கவுள்ளாா்.
திமுக எதிா்ப்பு: மசோதாக்களின் பெயா் ஹிந்தியில் இருப்பது குறித்து நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் எதிா்ப்பு தெரிவித்ததாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘குற்றவியல் விசாரணைகள், மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் நடைபெறுவதால், இந்த மசோதாக்கள் குறித்து பல்வேறு மாநிலங்களின் பாா் கவுன்சில் உறுப்பினா்களுடன் நாடாளுமன்றக் குழு கலந்தாலோசிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்று தயாநிதி மாறன் பரிந்துரைத்தாா். இதற்கு திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் டெரிக் ஓபிரையன் உள்ளிட்ட இதர எதிா்க்கட்சி உறுப்பினா்களும் ஆதரவு தெரிவித்தனா்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற அடுத்த கூட்டத்தொடரில், மேம்படுத்தப்பட்ட 3 மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்யும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நிலைக் குழு அறிக்கை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.