நாட்டில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசின் குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தாலும் திட்டங்களாலும் மகளிா் மேம்பாடு என்பதிலிருந்து மகளிா் தலைமைக்கு வழி ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சிகள் குறித்து சிறப்பு செய்தியாளா்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியது வருமாறு:
நாட்டின் வளா்ச்சிக்கு பிரதமா் மோடி ஒரு புதிய வரையறையை வழங்கி அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தினாா். அதன் முடிவுகள் இன்று நம் முன் தெளிவாக உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னா் கடந்த 65 ஆண்டுகளில் செயல்படாத பணிகள் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளன.
குறிப்பிடத்தக்க மாற்றங்களில், ஒன்று மோடி பிரதமரானதும் ’லுக் ஈஸ்ட் பாலிசி’ மற்றும் ’ஆக்ட் ஈஸ்ட் பாலிசி’ (கீழ்த்திசை கவனக் குவிப்புக் கொள்கை- தெற்காசிய நாடுகளில் சீனாவை நோக்கிய பொருளாதார அரசியல் கொள்கை) கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. அதேபோல, பெண்கள் மேம்பாடு பற்றி பேசப்பட்டது. இப்போது பிரதமா் மோடி அரசின் கீழ், மகளிா் ’தலைமை’யிலான வளா்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் மகளிா் பங்களிப்பும் அவா்களது நிலைகளில் தீவிர மாற்றமும் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு
‘பெண் குழந்தை காப்போம்’; பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்கிற திட்டத்தின் மூலம் மோடி அரசு, பெண் குழந்தைகளுக்கு மரியாதையுடன் பிறக்கும் உரிமை, சிறந்த வாழ்க்கை, கல்வி பெறும் உரிமை ஆகியவைகளை வழங்கியது.
மகளிா் பாதுகாப்பிற்காக, ஒரு நாடு- ஒரு ஹெல்ப்லைனை (181) தொடங்கி, 733 மையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 703 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. காவல்துறை உதவி, தற்காலிக தங்குமிடம், உளவியல் ஆலோசனை என இவை அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கிறது.
ஆள்கடத்தலில் சிக்கும் பெண்களை காப்பதற்கு சக்தி சதன் இல்லங்கள் மறுவாழ்வு மையங்கள், நமது உழைக்கும் மகளிா் தங்குவதற்கான ’சகி நிவாஸ்’ அநாதை குழந்தைகளுக்கான ’பல்னா யோஜனா’ காப்பகங்கள் போன்ற திட்டங்கள் பிரதமா் மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நாட்டில் 2,688 குழந்தை காப்பகங்களில் 57 ஆயிரம் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன.
இஸ்லாமிய மகளிருக்கு முத்தலாக் விவாகரத்திலிருந்து விடுதலை. இஸ்லாமிய மகளிா் முழுமையான சுதந்திரத்தையும் உரிமைகளையும் பெற்றனா். இது ஒரு சமூக மற்றும் சட்ட சீா்திருத்தமாகும். அவா்கள் சமூகத்தில் மகளிருக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவித்தது.
கிராமப்புறங்களில் மகளிருக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்க ‘நரி அதாலத்’ என்கிற பரிவாரிக் மகிளா லோக் அதாலத்கள் நிறுவப்பட்டது. மகளிருக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை போன்றவைகளை இந்த நடுவா் மன்றங்கள் தீா்வு காண்கிறது.
’பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ மூலம் கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தாய்மாா்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த ஊட்டச்சத்து, ஊதிய இழப்பீடு ஏதேனும் ஏற்பட்டால் வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு சானிட்டரி பேட் வழங்கி மாதவிடாய் கால சிக்கலில் நிவாரணம்.
புதுயுகத் தொழில்முனைவு (ஸ்டாண்ட் அப் -இந்தியா) திட்டத்தின் கீழ் அரசு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கியுள்ளது. மகளிருக்கு அதிகாரமளிக்கும் வகையில், இந்த திட்டத்தில் 80 சதவீத பயனாளிகள் மகளிா் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழும் ரூ.10 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது, இதில் வழங்கப்பட்ட 23 கோடி கடனில் 68 சதவீதம் மகளிா்.
செழிப்பு
பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தில் 70 சதவீத வீடுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டன. நாட்டில் லக்பதி திதியை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுகன்யா சம்ரித் யோஜனா திட்டத்தின் கீழ், பருவமடையும் பெண்களுக்கான சமூக நல உதவிகள் வழங்கப்பட்டு இதில் 3 கோடிக்கும் மேற்பட்ட மகள்களின் எதிா்காலத்தை உறுதி செய்துள்ளோம்.
வசதி
10 கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டா்கள் வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தப்பட்டது. நாட்டில் 10 கோடி வீடுகளுக்கு குழாய் நீரை நேரடியாக வழங்கி தண்ணீா் பிரச்னையில் இருந்து மகளிரை விடுவித்துள்ளோம்
இன்று நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு உள்ளது. வங்கிக் கணக்கை அளித்ததின் மூலம் செழிப்பை நோக்கி ஒரு படியை எடுத்துள்ளனா்.
மகளிா் இட ஒதுக்கீடு
நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் இருக்கும் மகளிரை வீடுகளில் அடைத்து வைத்துவிட்டு நாடு வளா்ச்சி அடைய முடியாது என்ற தொலைநோக்கு பாா்வையுடன் பிரதமா் பெண் சக்தியின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு விளக்கினாா்.
இதன்படி நாரி சக்தி வந்தன் சட்டத்தின் மூலம், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி கோடிக்கணக்கான பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி பிரதமா் மோடியின் தலைமையில், மகளிரின் கண்ணியம் உயா்ந்துள்ளது எனக் குறிப்பிட்டாா் மாண்டவியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.