அமராவதி: ஆந்திரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது ஆந்திர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆந்திரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சி விரும்புகிறது. ஆனால், கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஆந்திரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கருதுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி அமைப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பாஜக உள்ளது.
இந்த நிலையில், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசநை நடத்தியது ஆந்திர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகே என அழைக்கப்படும் இந்திய அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பாஜக, காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியுள்ளார்.
கடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுத்தார். இதில் ஜெகன்மோகன் 151 இடங்களில் வெற்றி பெற்று முதல்வரானார்.
இந்த நிலையில், இந்த முறையும் ஜெகன் மோகன் ரெட்டிக்கான தேர்தல் வியூகத்தை பிரசாந்த் கிஷோரே வகுத்து கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை(டிச.24)விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் ஒன்றாக வெளியே வந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
இதையும் படிக்க | ஆந்திரம்: கூட்டணி குழப்பத்தில் பாஜக
அதன் பிறகு இருவரும் ஒரே காரில் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்திரபாபு நாயுடு தனது அரசியல் ஆலோசகர் ராபின் சர்மாவுடன் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய ஆந்திர அரசியல் நிலவரம், ஜெகன் அரசு மீதான மக்களின் அதிருப்தி, அரசியல் திட்டங்கள் மற்றும் அவற்றின் குறைபாடுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.
மேலும் இந்த முறை தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகளின் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இவர்களது சந்திப்பு ஆந்திர அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டியின் தேர்தல் வெற்றிக்கு வழி வகுத்த பிரசாந்த் கிஷோர் இந்த முறை தேர்தலுக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது ஏன்? என அனைத்து தரப்பினரும் விவாதிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.