அமெரிக்காவில் கோர விபத்து: இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் பலி
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் பலியானவர்கள், ஒய்எஸ்ஆர்சி கட்சி எம்எல்ஏ வெங்கட சதீஷ் குமாரின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை, ஜான்சன் கௌண்டி பகுதியில், ஃபோர்ட்வொர்த் அருகே சிறிய வேனும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ஜார்ஜியாவில் வாழ்ந்து வந்த குடும்பத்தினர், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட டெக்ஸாஸ் சென்றுள்ளனர். அங்குள்ள உறவினர்கள் வீட்டில் பண்டிகையை கொண்டாடிவிட்டு, உயிரியல் பூங்காவுக்குச் சென்று திரும்பிய போது, பிக்கப்-டிரக் ஒன்று, அவர்கள் வந்த சிறிய வேன் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், சிறிய வேனில் வந்த பி. நாகேஸ்வர ராவ், சீதா மகாலட்சுமி, நிஷிதா, நவீனா, க்ருத்திக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆறாவது நபரின் உடல் அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையே, டிரக்கில் வந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நவீனா மற்றும் அவரது பிள்ளைகள் கிருத்திக், நிஷிதா ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், நாகேஸ்வர ராவ், சீதா மகாலட்சுமி ஆகியோர், தங்களது மகள் மற்றும் பேரக் குழந்தைகளைப் பார்க்க இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.