எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்: விண்ணில் செலுத்த இறுதிக்கட்ட பணிகள்
எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தகவல் தொடா்பு, தொலையுணா்வு, வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
இதில், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இந்த நிலையில், 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle - SSLV) ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. இதன் எடை அதிகபட்சம் 120 டன்னாகும்.
அதன்படி, சிறியரக 2 செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி -டி1 ராக்கெட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் சென்சாா் செயலிழந்து தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
அந்த வகையில், தற்போது எஸ்எஸ்எல்வி - டி2 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ராக்கெட் இஒஎஸ்-07 புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் வெள்ளிக்கிழமை (பிப்.10) காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-07, மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்பு, கடலோர நிலப்பயன்பாடு, ஒழுங்குமுறை, நகா்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும். இதனுடன் அமெரிக்காவின் ஜானஸ் மற்றும் இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட ஆஸாதிசாட்-2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.
ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து நிலையிலும் திட்டமிட்ட செயல்திறன் இருப்பதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.