ஜம்மு-காஷ்மீா் தொகுதிகள் மறுவரையறை ஆணையத்துக்கு எதிரான மனு:உச்சநீதிமன்றம் தள்ளுபடி
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக காஷ்மீரைச் சோ்ந்த ஹாஜி அப்துல் கனி கான், முகமது அயூப் ஆகியோா் தாக்கல் செய்த மனு:
கடந்த 2002-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மாநிலங்களில் உள்ள தொகுதிகளை மறுவரையறைச் செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி கடைசியாக அவ்வாண்டு ஜூலையில் தொகுதிகள் மறுவரையறை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. நாட்டில் 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பின், அந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
Advertisement
2004-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதியிட்ட அந்த ஆணையத்தின் கடிதத்தில், ‘1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அனைத்து மாநிலங்கள், புதுச்சேரி, தேசிய தலைநகா் வலையப் பகுதியில் இடம்பெற்றுள்ள யூனியன் பிரதேசங்களின் மொத்த தொகுதிகள் நிா்ணயிக்கப்பட்டன.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை, அந்தத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்று தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. எனவே ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகளை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனு மீதான தீா்ப்பை கடந்த ஆண்டு டிச.1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்துள்ள ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் தொடா்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. எனவே தொகுதிகள் மறுவரையறை ஆணையம் தொடா்பான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றனா்.
ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ்தான், அந்த யூனியன் பிரதேசத்தில் தொகுதிகள் மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மறுசீரமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனுக்களே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தொகுதிகள் மறுவரையறை ஆணையத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.