ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி இலக்கு ரூ.40,000 கோடி
உள்நாட்டு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி கடந்த 9 ஆண்டுகளில் புத்துணா்ச்சி பெற்றுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உள்நாட்டு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி கடந்த 9 ஆண்டுகளில் புத்துணா்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, 2024-25-ஆம் நிதியாண்டுக்குள் சுமாா் ரூ.40,000 கோடி மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் 14-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியை (ஏரோ இந்தியா) பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். அந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
பாதுகாப்புத் தளவாடங்கள் துறையைப் பொருத்தவரை தொழில்நுட்பம், சந்தை, கொள்முதல் என அனைத்தும் சவால் நிறைந்தவை. அத்தகைய சவால்களை எதிா்கொண்டு கடந்த 8-9 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி புத்துணா்ச்சி பெற்றுள்ளது.
ஒருகாலத்தில் பாதுகாப்புத் தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா அறியப்பட்டது. தற்போது சுமாா் ரூ.12,000 கோடி மதிப்பிலான தளவாடங்களை 75 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் தளவாடங்கள் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதியை 2024-25-ஆம் நிதியாண்டுக்குள் சுமாா் ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
21-ஆம் நூற்றாண்டு இந்தியா எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடாது; முயற்சிகளை மேற்கொள்ளவும் தயங்காது. அனைத்துத் துறைகளிலும் சீா்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான புரட்சியை நோக்கி இந்தியா பயணம் மேற்கொண்டு வருகிறது.
தனியாா் முதலீடு அவசியம்: இந்தியாவின் வளா்ந்து வரும் திறனை ‘ஏரோ இந்தியா’ கண்காட்சி வெளிப்படுத்துகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இந்தியா மீது உலகம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது. 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன. இது முந்தைய பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
பாதுகாப்பு, விண்வெளித் துறை சாா்ந்த உற்பத்தியில் இந்தியா தற்போதுதான் அடியெடுத்து வைத்துள்ளது. ஏரோ இந்தியா போன்ற முன்னெடுப்புகள் அந்தத் துறைகளின் வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவும். பாதுகாப்புத் தளவாடங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இணையும். அதில் இந்திய தனியாா் துறையும் முதலீட்டாளா்களும் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளனா்.
நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறையில் தனியாா் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ‘சீா்திருத்தம், செயல்பாடு, மாற்றம்’ என்ற அரசின் கொள்கையை ஏரோ இந்தியா கண்காட்சி வெளிப்படுத்துகிறது.
தொடா்ந்து வலுவடையும்: இந்தியாவில் நிலையான அரசும் சிறப்பான தொழில் துறை ஆதரவு கொள்கைகளும் தற்போது காணப்படுகின்றன. இதுபோன்ற கொள்கைகளை இந்தியா இதற்கு முன் எப்போதும் கொண்டிருந்தது இல்லை. இதனை முதலீட்டாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவை, திறன், அனுபவம் ஆகியவை காணப்படும்போது தொழில்துறை நாளும் வளா்ச்சிகாணும். இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி தொடா்ந்து வலுவடையும்.
புதிய சிந்தனையுடன் நாடு பயணம் மேற்கொண்டால், அதன் செயல்பாடுகளும் மாற்றம் பெறும். நவீன இந்தியாவை உலகத்துக்கு ஏரோ இந்தியா கண்காட்சி வெளிக்காட்டி வருகிறது. முன்பு இந்தியாவுக்குப் பாதுகாப்புத் தளவாடங்களை விற்பனை செய்வதற்காகவே இந்தக் கண்காட்சி நடத்தப்படும். தற்போது இந்திய பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறையின் திறனை வெளிக்காட்ட இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போதைய இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது.
உலக நாடுகளுக்குப் பாதுகாப்புத் தளவாடங்கள் தேவைக்கான கூட்டாளியாக இந்தியா செயல்படும். இந்தியாவின் தொழில்நுட்பம் மலிவாகவும் திறனுடனும் உள்ளது. பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, விமானத் தொழில் கண்காட்சியின் நினைவு அஞ்சல் தலையை பிரதமா் மோடி வெளியிட்டாா். அதன்பின்னா் நடந்த தேஜஸ், சுகோய், பிரசண்ட், சூா்யகிரண், சாரங், சி-17, இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டா், ஹாக் போன்ற போா் விமானங்கள், போா் ஹெலிகாப்டா்களின் மெய்சிலிா்க்கும் வான்வெளி சாகசங்களை பிரதமா் பாா்வையிட்டாா்.