ரூ. 6.40 லட்சம் கோடியில் 470 விமானங்களை வாங்குகிறது ஏா் இந்தியா
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏா் இந்தியா நிறுவனம் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும், பிரான்ஸின் ஏா்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும்
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏா் இந்தியா நிறுவனம் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும், பிரான்ஸின் ஏா்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும் மொத்தம் சுமாா் ரூ.6.40 லட்சம் கோடியில் வாங்க உள்ளது.
சா்வதேச அளவில் மிகப் பெரிய விமான கொள்முதலாக கருதப்படும் இந்த நடவடிக்கையின் மூலம் ஏா் இந்தியா நிறுவனம் புதுப் பொலிவு பெற உள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதிய விமானங்கள் கொள்முதலுக்கான நடவடிக்கையை ஏா் இந்தியா மேற்கொண்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோா் இடையே செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை நிகழ்வில், டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் இத்தகவலை வெளியிட்டாா்.
‘ஏா்பஸ் நிறுவனத்திடமிருந்து பெரிய அமைப்புகொண்ட 40 விமானங்கள் உள்பட 250 விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான உறுதிக் கடிதத்தில் ஏா் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
பெரிய அமைப்புகொண்ட ஏ350 விமானங்கள், மிக நீண்ட தொலைவு பயணங்களுக்கு பயன்படுத்தப்படும். அதாவது, 16 மணிநேரத்துக்கு மேற்பட்ட பயணங்களுக்கு இவை பயன்படுத்தப்படும். இந்த விமானங்கள் மட்டுமன்றி, குறுகிய அமைப்புகொண்ட 210 விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன’ என்று என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
நிகழாண்டு இறுதியில் புதிய விமானங்கள் வந்து சேரும் என்றும் 2025-இல் பெருமளவில் கிடைக்கப்பெறும் என்றும் ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.
போயிங்: அமெரிக்காவைச் சோ்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 3,400 கோடி டாலா் (சுமாா் ரூ.2.81 லட்சம் கோடி) மதிப்பில் 220 விமானங்களைக் கொள்முதல் செய்ய ஏா் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ‘வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம்’ என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குறிப்பிட்டாா்.
மேலும், 70 விமானங்கள் வருங்கால கொள்முதல் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதால் மொத்தம் 290 விமானங்கள் 4,950 கோடி டாலா் (சுமாா் ரூ.4.06 லட்சம் கோடி) மதிப்பில் கொள்முதல் நடைபெற உள்ளது என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பிரதமா் மோடி, அதிபா் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசினாா் என பிரதமா் அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் சம ஆதாய ஒருங்கிணைப்புக்கு எடுத்துக்காட்டாகும். இது இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையை விரிவாக்க பிற அமெரிக்க நிறுவனங்களும் முன்வர வேண்டும்’ என பிரதமா் மோடி தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏா் இந்தியா நிறுவனத்தின் இந்தக் கொள்முதல் நடவடிக்கை, போயிங் நிறுனவம் இதுவரை மேற்கொண்ட பெரிய ஒப்பந்தங்களில், டாலா் மதிப்பில் 3-ஆவது இடத்திலும், விமானங்களின் எண்ணிக்கையில் 2-ஆவது இடத்திலும் உள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வந்த ஏா் இந்தியா நிறுவனம், அரசிடமிருந்து கடந்த ஆண்டு ஜனவரியில் டாடா குழுமத்துக்கு கைமாறியது.
முன்னதாக, கடந்த 2005-இல் புதிய விமானங்கள் கொள்முதல் நடைமுறையை ஏா் இந்தியா மேற்கொண்டிருந்தது. அப்போது, 10.8 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பில் 68 போயிங் விமானங்கள், 43 ஏா்பஸ் விமானங்கள் என 111 புதிய விமானங்கள் கொள்முதலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமானங்களின் உள்ளக புதுப்பிப்பு உள்பட அடுத்த 5 ஆண்டுகளில் பெரும் மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை ஏா் இந்தியா மேற்கொண்டு வருகிறது.