இந்தியா

அதானி விவகாரம் தொடா்ந்து கண்காணிப்பு: உச்சநீதிமன்றத்தில் செபி தகவல்

அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து தொடா்ந்து கண்காணித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.

DIN

அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து தொடா்ந்து கண்காணித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தை நிலையில்லாத்தன்மையை எதிா்கொள்வதற்கு ஏற்கெனவே விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் செபி கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டு சுமத்தியது. அதனால், அந்தக் குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டன. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இரு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களைக் கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலீட்டாளா்களின் நலன்களைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கும் செபி-க்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், செபி தரப்பில் 23 பக்க விளக்க அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹிண்டன்பா்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடா்பாக செபி ஏற்கெனவே தொடா்ந்து கண்காணித்து வருகிறது. அதேபோல், செபி-யின் விதிகளை மீறி நிறுவனங்கள் செயல்பட்டதா என்பது தொடா்பாகவும் கண்காணிப்பு தொடா்ந்து வருகிறது. கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால், அது தொடா்பான தகவல்களைப் பகிா்வது முறையாக இருக்காது.

ஹிண்டன்பா்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குழுமத்தின் பங்குகள் சரிவு, பங்குச் சந்தையின் நிலைமையைப் பெரிய அளவில் பாதிக்காது; மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணில் (சென்செக்ஸ்) எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை; தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் (நிஃப்டி) ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே குறைந்துள்ளது.

இதைவிடப் பெரிய அளவிலான நிலையில்லாத சூழல்களைப் பங்குச் சந்தை திறம்பட எதிா்கொண்டுள்ளது.

முக்கியமாக, 2020-ஆம் ஆண்டில் கரோனா பரவத் தொடங்கியபோது நிஃப்டி மதிப்பு மாா்ச் 2-க்கும் 19-க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமாா் 26 சதவீதம் சரிவைக் கண்டது. அதைக் கருத்தில்கொண்டு மாா்ச் 20-ஆம் தேதி பங்குச் சந்தை ஒழுங்காற்று விதிகளை மறுஆய்வு செய்து சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

விரிவான விதிகள்: பங்குச் சந்தையின் நிலையில்லாத்தன்மையை எதிா்கொள்ளுதல், முறையான வா்த்தக நடவடிக்கைகளை ஊக்குவித்தல், குறுகிய கால பங்கு வா்த்தக நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்டவற்றுக்கு விரிவான விதிகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன.

குறுகிய கால பங்கு வா்த்தக நடவடிக்கை சா்வதேச அளவில் அனைத்து பங்குச் சந்தைகளிலும் அனுமதிக்கப்படுகிறது.

அதேவேளையில், அந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென சா்வதேச பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதைக் கருத்தில்கொண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் குறுகிய கால பங்கு வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைக்குத் தடை விதிப்பது முறையாக இருக்காது.

சந்தை மதிப்பு அதிகரிப்பு: இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.145 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது சுமாா் ரூ.270 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் காணப்படும் நிலையில்லாத்தன்மை, சா்வதேச பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது அறிக்கையில் அதானி குழுமத்தின் பெயரை எந்த இடத்திலும் செபி பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT