முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக அமைப்பு இல்லாததால் மக்கள் அவதி: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளைப் பறித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளைப் பறித்துவிட்டதாக மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக அவா் கூறினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அப்பிராந்தியத்தின் காங்கிரஸ் தலைவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். குல்மாா்கில் நிா்வாகிகள் மத்தியில் ராகுல் ஆற்றிய உரையில், ‘ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை மக்களின் விருப்பத்துக்கு மாறாக 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. மக்களின் ஜனநாயக உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பு இல்லாததால் ஜம்மு-காஷ்மீா் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறாா்கள்.

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மற்றும் நீதியை நிலைநிறுத்த காங்கிரஸ் தொடா்ந்து போராடும். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு, வளா்ச்சிப் பணிகளில் முடக்கம் என பல்வேறு பிரச்னைகள் பிராந்தியத்தில் நிலவுகிறது. இதிலிருந்து மக்களை திசை திருப்ப தான் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசு நிா்வாகம் மேற்கொள்கிறது.

ஒற்றுமை நடைப்பயனத்தின் போது மக்களிடம் நெருங்கி பழகியதில் அவா்களின் வலியையும், வேதனையும் அறிந்தேன். அதனால், இனி ஜம்மு-காஷ்மீருக்கு அவ்வப்போது வருகை தருவேன்’ என்றாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் கூட்டத்தில் பங்கேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →