கரோனா தடுப்பூசி இதயம் தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் பரவிவரும் நிலையில் தற்போது, கரோனா நோய்த்தொற்றுக்கு பின்னர் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் உள்ள மிராமர் கடற்கரையில் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி யோக் சமிதி சார்பில் யோகா முகாமில் யோகா குரு பாபா ராம்தேவ், கோவா முதல்வர் பிரமோத்சாவந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், பாபா ராம்தேவ் பேசுகையில், நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மக்கள் கண்பார்வை, செவித்திறன் ஆகியவற்றை இழந்துள்ளனர் என்று கூறினார்.
பாபா ராம்தேவுக்கு பதிலளிக்கும் வகையில், புகழ்பெற்ற புற்றுநோயியல் மற்றும் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணரான என்.ஸ்ரீதரன் கூறுகையில், புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், அதற்கும் தொற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாதிப்புகள் அதிகரிப்பது ஒரு சாதாரண நிகழ்வு. "கரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு புற்றுநோய் அதிகரித்துள்ளது என்று கூறுவதற்கு எந்த ஆதரமும் இல்லை," என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் கோவா பிரிவின் முன்னாள் தலைவர் மருத்துவர் சேகர் சல்கர் கூறுகையில், உலகம் முழுவதும் மக்கள்தொகை அதிகரிப்பால் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் வழக்குகள் 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. “புற்றுநோய்கள் குறையப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில், அதற்கு கரோனா நோய்த்தொற்று தான் காரணம் என கூற முடியாது,” என்றார்.
மேலும், ராம்தேவ் பெயரை குறிப்பிடாமல், “பிரபலங்கள் தங்கள் வார்த்தைகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை உணர்ந்து பொறுப்புடன் அறிக்கைகளை வெளியிட வேண்டும்.” இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 104 புற்றுநோயாளிகள் உள்ளனர், 2018 இல் ஒரு லட்சத்திற்கு 85 நோயாளிகள் இருந்தனர்.
"ஆனால், அதே நேரத்தில், ஒரு லட்சத்திற்கு 500 நோயாளிகள் என்ற விகிதத்தைக் கொண்ட அமெரிக்காவை விட நாம் மிகவும் சிறப்பாக இருக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார். நாம் நமது வாழ்க்கை முறையை சரி செய்யாவிட்டால், அமெரிக்காவின் புற்றுநோய் விகிதத்தை இந்தியா விஞ்சிவிடும் என்று சல்கர் கூறினார்.
முன்னதாக, பிப்ரவரி 4 ஆம் தேதி ராம்தேவ், இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்துடன் ஒப்பிடும் போது, முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவும், இந்து பெண்களை கடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ராஜஸ்தானின் பார்மரில் நடந்த கூட்டத்தில், இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்ய கற்றுக்கொடுக்கும் அதே வேளையில், இரண்டு மதங்களும் மதமாற்றத்தில் வெறித்தனமாக இருப்பதாக பாபா ராம்தேவின் குற்றச்சாட்டு சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.