இனி இயந்திரம் மூலம் மனிதக் கழிவு அகற்றம்! அறிமுகமானது 'பண்டிகூட்' - அசத்தும் கேரளம்!
மனிதக் கழிவுகளை அகற்ற 'பண்டிகூட்' எனும் இயந்திரத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
மனிதக் கழிவுகளை அகற்ற 'பண்டிகூட்' எனும் இயந்திரத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளம் பெற்றுள்ளது.
கேரளத்தின் நீர்வளத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், திரிச்சூர் மாவட்டத்தில் 'பண்டிகூட்' எனும் மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து, பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தார்.
டிரோன் தொழில் நுட்பத்துடன் கூடிய அமைப்புடன் இந்த பண்டிகூட் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை பாதாள சாக்கடையிலிருந்து அள்ளி வெளியே எடுத்துப்போடுவதை இந்த இயந்திரம் செய்கிறது. இயந்திரத்தில் எச்.டி. கேமராவும், சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், சாக்கடையின் நச்சு மிகுந்த வாயுக்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். மேலும், நீர் புகாத்தன்மையுடைய கருவிகளும் இயந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்தவித நீரினாலும் கருவிகள் சேதமடையாது.
முதல் கட்டமாக திரிச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் 'பண்டிகூட்' இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் இந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.