எல்லையில் ஏற்படக் கூடிய சவால்களை சமாளித்து நாட்டைக் காக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
எல்லையில் ரூ. 724 கோடி மதிப்பில் 22 பாலங்கள் உள்பட 28 உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் லடாக்கில் எட்டு, அருணாசல பிரதேசத்தில் ஐந்து, ஜம்மு-காஷ்மீரில் நான்கு, சிக்கிம், பஞ்சாப், உத்தரகண்டில் தலா தலா மூன்று, ராஜஸ்தானில் இரண்டு திட்டங்கள் அடங்கும்.
இவற்றை அருணாசல பிரதேசத்தில் அலாங்-யின்கியாங் பாதையில் உள்ள சியோம் பாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நநாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது அவர் பேசுகையில் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அவ்வப்போது மேற்கொள்ளும் அத்துமீறல்களை மறைமுகமாகக் குறிப்பிட்டார். ராஜ்நாத் சிங் பேசியதாவது:
அண்மையில் வடக்கு எல்லைப் பகுதியில் எதிரியின் செயல்களை நமது படைகள் திறம்பட சமாளித்தன. சூழ்நிலையை தைரியத்துடன் நமது படைகள் கையாண்டன. அந்தப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவுக்கு மேம்படுத்தப்பட்டது இதற்கு உதவியது.
எல்லையில் ஏற்படக் கூடிய சவால்களை சமாளித்து நாட்டைக் காக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. எந்தச் சூழலையும் கையாள இந்தியா தயாராக உள்ளது.
எல்லையையொட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இங்கு கட்டப்பட்டுள்ள புதிய பாலம் உள்ளூர்வாசிகளின் போக்குவரத்தை எளிதாக்குவதுடன் படைகளையும், நவீன சாதனங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்லவும் உதவும்.
ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை உயர்த்துவதற்காக எல்லையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அரசு, எல்லைச் சாலை அமைப்பு ஆகியவற்றின் முயற்சிகளுக்கு இந்தத் திட்டங்கள் உதாரணமாகும்.
கடந்த 2021இல் எல்லைச் சாலைகள் அமைப்பு 102 உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றியது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 28 திட்டங்களுடன் சேர்த்து 2022இல் 103 உள்கட்டமைப்புத் திட்டங்களை எல்லைச் சாலைகள் அமைப்பு நிறைவேற்றியது.
இந்தப் பணிகள் காரணமாக, ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு வந்து குடியேறுகின்றனர். அந்தப் பகுதிகளில் பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையங்கள், மின்சார விநியோகம், வேலைவாய்ப்புகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.