பாட்டி இறந்த 21 நாள்களில் 3 பேத்திகள் எடுத்த துயர முடிவு
கர்நாடக மாநிலம் துமகுரு அருகே, பாட்டி இறந்த 21 நாள்களில், அவரது பராமரிப்பில் இருந்து வந்த இளம் வயது பேத்திகள் மூன்று பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
துமகுரு: கர்நாடக மாநிலம் துமகுரு அருகே, பாட்டி இறந்த 21 நாள்களில், அவரது பராமரிப்பில் இருந்து வந்த இளம் வயது பேத்திகள் மூன்று பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
சிக்கநாயகனஹள்ளி தாலுகாவில் பரகனஹல்லி பகுதியில், மூன்று பேத்திகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வியாழக்கிழமைதான் அப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்துள்ளது.
ரஞ்சிதா (24), பிந்து (21), சாந்தனா (18) ஆகிய மூன்று பேரும் ஜனவரி 11ஆம் தேதியே அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் கூட, அவர்களைப் பற்றி விசாரிக்காமல் இருந்துவிட்டுள்ளனர். துர்நாற்றம் வீசியதால்தான் அவர்கள் தற்கொலை அப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று பெண்களின் பெற்றோரும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இவர்கள் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், 21 நாள்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவால் பாட்டியும் இறந்துவிட்டார்.
மூன்று பேரும், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இரண்டு பேத்திகளுக்கு திருமண பேச்சுவார்த்தையும் நடந்து வந்துள்ளது. ஆனால், பாட்டி திடீரென மரணமடைந்ததால், சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.