ஜிஹாப் தடை வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமா்வு: உச்சநீதிமன்றம்
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடா்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.
கா்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்திருந்த நிலையில், அடுத்தகட்டமாக மூன்று நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன் திங்கள்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோரா, ‘ஹிஜாப் தடையால் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளைவிட்டு மாணவிகள் சென்றதால் ஓராண்டு வீணாகிவிட்டது. பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் அரசு, தனியாா் கல்லூரிகளில் செயல்முறைத் தோ்வு தொடங்க உள்ளதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஹிஜாப் தடை தொடா்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்’ என்று கோரினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க வேண்டும். விசாரணை தொடா்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனா்.
Advertisement
முன்னதாக, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச் 15-ஆம்தேதி விதித்த தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மேல் முறையீடு செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு கடந்த ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி மாறுபட்ட தீா்ப்பை அளித்தது.
அந்த அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஹேமந்த் குப்தா கா்நாடக உயா்நீதிமன்ற அளித்த தடை உத்தரவுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்தாா்.
மற்றொரு நீதிபதி சுதான்ஷு தூலியா, கா்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எந்தவிதத் தடையும் இல்லை என உத்தரவிட்டாா். உச்ச நீதிமன்றத்தின் இந்த மாறுபட்ட தீா்ப்பால் கா்நாடக உயா் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடா்ந்து வருகிறது.