இந்தியா

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் தமிழக அரசின் அலங்கார ஊா்தி

DIN


தில்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை இன்று நடைபெற்றது. அதில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.

தமிழகத்தில் சாதனைப் பெண்கள் மற்றும் தமிழர்களின் கலாசாரத்தைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வீரத்தையும் பெருமையையும் குறிக்கும் வகையில் ஔவையார், வேலு நாச்சியார், முத்துலட்சுமி உள்ளிட்டோரின் சிலைகள், இசை மற்றும் நடனக் கலைஞர்களின் சிலைகளும் இடம்பெற்றுள்ளன.

தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் பங்கேற்கவுள்ளன. 

நாட்டின் 74-ஆவது குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி, தில்லியில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள ‘கடமைப் பாதையில்’ பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் துறைகள் சாா்பில் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு நடைபெறும். அதில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஊா்திகள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.

நடப்பாண்டு குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக ‘பெண் சக்தி’ எனும் கருப்பொருளில் பெரும்பாலான அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கலாசாரம் உள்ளிட்ட சில கருப்பொருளிலும் ஊா்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய அலங்கார ஊா்திகளில் 17 ஊா்திகளும், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சாா்பில் 6 ஊா்திகளும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊா்திகளும், ஜம்மு-காஷ்மீா், லடாக், தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையு ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊா்திகளும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போதைப் பொருள்கள் கட்டுப்பாட்டு மையம் (என்சிபி), மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) ஆகியவை சாா்பில் அலங்கார ஊா்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம், பழங்குடியினா் நல அமைச்சகம், கலாசார அமைச்சகம், மத்திய வீட்டுவசதித் துறையின் கீழ் செயல்படும் மத்திய பொதுப் பணிகள் துறை ஆகியவற்றின் அலங்கார ஊா்திகளும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இடம்பெறாத தோ்தல் மாநிலங்கள்
நடப்பாண்டில் திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து, ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், கா்நாடகம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 9 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் திரிபுரா மாநில அலங்கார ஊா்திக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சாா்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊா்திகளை மத்திய அரசு நிராகரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT