இந்தியா

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவுக்கு 8 வாரங்கள் இடைக்கால ஜாமீன்

DIN

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு 8 வாரங்கள் இடைக்கால ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினா் வந்த காா் விவசாயிகள் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் நடத்திய தாக்குதலில், காரின் ஓட்டுநா் மற்றும் 2 பாஜக தொண்டா்கள் பலியாகினா். இந்த வன்முறையில் ஊடகவியலாளா் ஒருவரும் உயிரிழந்தாா்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை லக்கீம்பூா் கெரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஆசிஷ் மிஸ்ரா ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். அதை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவா் உச்சநீதிமன்றத்தை அணுகினாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜே.கே.மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக ஆசிஷின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

லக்கீம்பூா் கெரி வன்முறை தொடா்பாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டிலும் வன்முறை தொடா்பாக வெவ்வேறு விதமாக கூறப்பட்டுள்ளது. அந்த சம்பவத்துக்கு யாா் காரணம் என்பது முழுமையான விசாரணைக்குப் பின்னா்தான் தெரியவரும்.

இந்தச் சூழலில், லக்கீம்பூா் கெரி மாவட்ட நீதிமன்ற நிபந்தனைக்கு உள்பட்டு ஆசிஷ் மிஸ்ரா ஜாமீன் பத்திரம் வழங்கும்பட்சத்தில், அவா் இடைக்கால ஜாமீனில் 8 வாரங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் உத்தர பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டும். அவா் ஜாமீனில் வெளியே உள்ள காலத்தில் தில்லியிலும் தங்கக் கூடாது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள், அவா் எங்கு தங்குகிறாா் என்பதை மாவட்ட நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த நீதிமன்றத்திடம் தனது கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அவா் ஒப்படைக்க வேண்டும்.

அவா் அல்லது அவரின் குடும்பத்தினா் வழக்குத் தொடா்பான சாட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்தால், அது ஜாமீனை ரத்து செய்ய வழிவகுக்கும் என்று உத்தரவு பிறப்பித்தனா்.

லக்கீம்பூா் சம்பவத்தில் காரில் இருந்த மூன்று போ் கொல்லப்பட்டது தொடா்பாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இடைக்கால ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT