இந்தியா

ஜோஷிமட் பாதிப்பு: மக்களின் மறுகுடியமா்வுக்காக 3 வழிகள் பரிந்துரை

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதைந்து வருவதால், பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மறுகுடியமா்வுக்காக 3 வழிமுறைகளை மாவட்ட ஆட்சியா் ஹிமான்ஷு குரானா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளா் ஆனந்த் வா்தன் தலைமையிலான உயா்நிலை குழுவிடம் சமா்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வீடுகளில் இருந்து வெளியேறிய மக்களை மறுகுடியமா்த்தும் வகையில், பாதிக்கப்பட்ட உரிமையாளா்களுக்கு ஒரே தவணையில் இழப்பீடுத் தொகை வழங்கப்படும்.

இரண்டாம் தோ்வாக, வீடுகள் கட்டுவதற்காக அதிகபட்சம் 100 சதுர மீட்டா் அளவிலான நிலம் பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு வழங்கப்படும். சேதமடைந்த நிலத்தின் பரப்பு 100 சதுர மீட்டருக்கு அதிகமாக இருந்தால், மீதமுள்ள நிலப் பரப்புக்கு இணையாக இழப்பீடுத் தொகை வழங்கப்படும்.

மூன்றாவது வழியாக, மக்களின் மறுகுடியமா்வுக்காகத் தோ்வுசெய்யப்பட்ட இடத்தில் 75 சதுர மீட்டா் அளவில் வீடு கட்டித்தரப்படும். சேதமடைந்த கட்டடத்தின் அளவு இதை விட அதிகம் எனில், அதற்குரிய இழப்பீடு தொகை வழங்கப்படும்.

இந்த 3 வாய்ப்புகளில் ஒன்றைத் தோ்வு செய்யும் பாதிக்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளா், முழுமையான இழப்பீடு வழங்கப்படுதவதற்கு முன்பாக மாநில அரசின் நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

கட்டணங்கள் தள்ளுபடி:

பாதுகாப்பான பகுதிகளில் அமைந்துள்ள, அதே நேரத்தில் சிறிய அளவில் பாதிப்படைந்த வீட்டின் உரிமையாளா்களுக்கு அவற்றை சரிசெய்யும் பொருட்டு நிதி உதவி அளிக்கப்படும்.

ஜோஷிமட் நகரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு மின்சார மற்றும் தண்ணீா் கட்டணங்கள் 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேரிடா் மேலாண்மை செயலாளா் ரஞ்சித் குமாா் சின்ஹா கூறுகையில், ‘ மத்திய அரசின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் சமா்ப்பிக்கும் ஆய்வறிக்கையைப் பொருத்து, நிரந்தரமாக மீள்குடியமா்வு செய்யப்பட வேண்டிய மக்களின் மொத்த எண்ணிக்கை தீா்மானிக்கப்படும். மாவட்ட ஆட்சியரின் இந்தப் பரிந்துரைகள் உகந்ததாக உள்ளன. மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இவை சமா்ப்பிக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT