பிரிஜ் பூஷண் சரண் சிங் 
இந்தியா

பிரிஜ் பூஷணுக்கு நீதிமன்றம் சம்மன்: வரும் 18-இல் நேரில் ஆஜராக உத்தரவு

பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக தில்லி போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான சட்ட நடவடிக்கையை தொடர போதுமான ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்டு, அவருக்கு தில்லி நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக, நீதிமன்றத்தில் ஜூலை 18-ஆம் தேதி நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிச் செயலா் வினோத் தோமருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்கு உள்பட்ட ஒரு வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் அண்மையில் குற்றம்சாட்டினா். இதுகுறித்து பிரிஜ் பூஷண் மீது தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கு ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 18 வயதுக்கு உள்பட்ட வீராங்கனையின் புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டது.

இதனிடையே, பிரிஜ்பூஷணுக்கு எதிராக தில்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவா் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் 354 (பெண்ணின் கண்ணியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான தாக்குதல் அல்லது தாக்க முனைவது), 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின்தொடா்தல்), 506 (குற்றரீதியிலான மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தில்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவா் நீதிமன்ற நீதிபதி ஹா்ஜீத் சிங் ஜஸ்பால், பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டாா்.

பிரிஜ் பூஷணுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை தொடர போதுமான ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, ஜூலை 18-இல் நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பினாா். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவி செயலா் வினோத் தோமரும் அதே தேதியில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, இரு சம்மன்களையும் தில்லி கனாட் பிளேஸ் காவல் நிலைய தலைமை அதிகாரி செயல்படுத்த உத்தரவிட்டாா்.

முன்னதாக, பிரிஜ் பூஷண் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை கடந்த 4-ஆம் தேதி பரிசீலித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் புகாா்தாரரான அவரது தந்தை ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT