என்னைக் கடத்திச் சென்று தாக்கினால்.. பழங்குடியின இளைஞரின் அச்சம்
என்னைக் கடத்திச் சென்று தாக்கினால் நான் என்னதான் செய்வேன் என்று மிகவும் பதற்றத்துடன் கேட்கிறார் அந்த பழங்குடி இளைஞர்.
போபால்: என்னைக் கடத்திச் சென்று தாக்கினால் நான் என்னதான் செய்வேன் என்று மிகவும் பதற்றத்துடன் கேட்கிறார் அந்த பழங்குடி இளைஞர்.
மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞா் மீது சிறுநீா் கழித்த பா்வேஷ் சுக்லா கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரை அழைத்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், அவரது காலை கழுவி மன்னிப்பும் கோரியிருந்தார்.
பல நூறு கிலோ மீட்டர் பயணித்து முதல்வரை சந்தித்துவிட்டு திரும்பியிருக்கும் இளைஞரின் குரலில் மட்டும் இன்னமும் பதற்றம் தணியவில்லை.
சம்பவம் நடந்தபோதும் சரி, விடியோ வைரலானபோதும் சரி, பழங்குடி இளைஞர், அது தான் அல்ல என்றுதான் குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
தற்போது பாதுகாப்புக்காக எனது வீட்டில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒரு சில நாள்கள்தான் இவர்கள் இருப்பார்கள். பிறகு என்னை யாராவது கடத்திச் சென்று தாக்கினால் என்ன செய்வேன், எனக்கும் என் குடும்பத்துக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறத்தியிருக்கிறார்.
சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பிரவேஷ் சுக்லா சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.
இது, முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கவனத்துக்குச் சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் 294 (ஆபாச செயல்கள்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் அவமதிப்பில் ஈடுபடுதல்), வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், பிரவேஷ் சுக்லாவை புதன்கிழமை அதிகாலையில் கைது செய்தனா்.
இதனிடையே, சித்தி மாவட்டத்தில் உள்ள பிரவேஷ் சுக்லாவின் தந்தை ராமகாந்த் சுக்லாவின் வீட்டின் ஒரு பகுதியை உள்ளூா் அதிகாரிகள் இடித்தனா். விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி, இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனா்.
பழங்குடியின இளைஞா் மீது சிறுநீா் கழிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க மாநில பாஜக சாா்பில் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.