சந்திரயான்-3: செயல் திட்ட ஒத்திகை நிறைவு
சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான செயல் திட்ட ஒத்திகையை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது.அதற்கு அடுத்தகட்டமாக கவுன்ட் டவுன் தொடங்கும் பணிகளும், எரிபொருள் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு
சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான செயல் திட்ட ஒத்திகையை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது.அதற்கு அடுத்தகட்டமாக கவுன்ட் டவுன் தொடங்கும் பணிகளும், எரிபொருள் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனா். இதற்கிடையே சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்கான செயல் திட்ட ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
அந்த ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்ாகவும், விண்ணில் சந்திரயான் - 3 விண்கலத்தை செலுத்துவதற்கான கடைசி நிலையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,900 கிலோ எடை கொண்டது. இதில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சந்திரயான் -2 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டா், ரோவா் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்களுக்கு நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.